ஜி20 நாடுகள் சீனாமீது கூடுதல் வர்த்தகத் தடைகளை விதிக்க வேண்டும்: அமெரிக்கா

ஜி20 நாடுகள் சீனாமீது கூடுதல் வர்த்தகத் தடைகளை விதிக்க வேண்டும்: அமெரிக்கா

2 mins read
fabf1b38-c865-4c93-bd14-9040f17e9b8e
உலகளாவிய வர்த்தகச் சமநிலையின்மையைக் குறைக்க, ஜி20நாடுகள் சீனாவுடனான தங்களின் வர்த்தக விதிகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (இடது) வலியுறுத்தியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: உலகளாவிய வர்த்தகச் சமநிலையின்மையைக் குறைக்கும் வகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதல் வர்த்தகத் தடைகளை விதிப்பது குறித்து ஜி20 நாடுகள் ஆலோசிக்க வேண்டும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் சீனப் பொருளியலை உள்நாட்டுப் பயனீட்டை நோக்கிய திசைக்கு மாற்றும்படி அந்நாட்டை வற்புறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜி20 நாடுகளின் நிதித் தலைவர்கள் சந்திப்பிற்கு முன்னர் அளித்த நேர்காணலில், சீனாவுடனான அமெரிக்காவின் நேரடி வர்த்தக நிலைமை வேகமாகச் சீரடைந்து வந்தபோதிலும், சீனாவிலிருந்து தற்போதைய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது என்பது நீடிக்க முடியாத ஒன்று என்று திரு பெசென்ட் கூறினார்.

“சீனாவின் 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 1.53 டிரில்லியன் வெள்ளி) வர்த்தக உபரியை உலகத்தால் தாங்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் அதிக உற்பத்தித் திறனும் ஏற்றுமதி சார்ந்த கொள்கைகளும் உலகப் பொருளியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இதனால் பல நாடுகளின் உள்நாட்டுத் தொழில்துறை பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், இந்நிலையைச் சமாளிக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திரு பெசன்ட் வலியுறுத்தினார்.

குறிப்பாக, சீனா தனது உள்நாட்டுப் பயனீட்டை அதிகரிக்காமல், ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருப்பது உலகச் சந்தையில் நியாயமற்ற போட்டியை உருவாக்குகிறது என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்நடவடிக்கை தொடர்ந்தால், பிற நாடுகளின் உற்பத்தித் துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

ஜி20 நாடுகள் கூட்டாகக் கூடுதல் இறக்குமதி வரிகளையும் வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதன் மூலம் பொருளியல் கொள்கைகளை மாற்றியமைக்கும்படி சீனாவிற்கு நெருக்குதல் தர முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். உலகச் சந்தையில் சீரான வர்த்தகச் சூழலை உருவாக்க அனைத்து நாடுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திரு பெசென்ட் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காநிதியமைச்சர்ஜி20சந்திப்புசீனாவர்த்தகம்ஏற்றுமதிஇறக்குமதி