தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா போர்நிறுத்தப் பேச்சு: கத்தார் பிரதமரைச் சந்திக்க டிரம்ப் திட்டம்

1 mins read
548c3919-25ce-4d61-ad25-426f5ba9d67d
கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: காஸா போர்நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சந்திக்க இருப்பதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

உத்தேச 60 நாள் போர்நிறுத்த உடன்பாடு குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இஸ்ரேலும் ஹமாஸும் ஈடுபட்டு உள்ளன.

அந்தப் பேச்சுவார்த்தை இம்மாதம் 6ஆம் தேதி கத்தார் தலைநகர் டோஹாவில் தொடங்கியது. 

போர்க்கைதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும், காஸாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படைகள் வெளியேற வேண்டும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் அமெரிக்கா வரைந்துள்ள உடன்பாட்டில் இடம்பெற்று உள்ளன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கத்தார் நடுவராக இருந்து செயல்பட்டு வருகிறது.

கத்தாரில் நடைபெற்று வரும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை மீது தமக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப்பின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்து உள்ளார்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் இரண்டு மாத போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆயினும், மார்ச் 18ஆம் தேதி இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர்நிறுத்தம் முறிந்தது.

குறிப்புச் சொற்கள்