வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸாவுக்கான ‘அமைதி வாரியம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (ஜனவரி 15) அறிவித்துள்ளார். காஸாவில் நடப்புக்கு வந்த இரண்டாம் கட்ட அமைதி உடன்பாட்டின் முக்கிய அம்சமாக அந்த அமைதி வாரியம் கருதப்படுகிறது.
“அமைதி வாரியம் அமைக்கப்பட்டுவிட்டதை மிகவும் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன்,” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷல் தளத்தில் பதிவிட்டார். வாரியத்தின் உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டார்.
வேறெந்த காலக்கட்டத்தையும் இடத்தையும்விட இப்போது அமைக்கப்பட்ட அமைதி வாரியம்தான் மிகவும் பெரியது, மிகவும் மதிப்பிற்குரியது என்று திரு டிரம்ப் வர்ணித்தார்.
பாலஸ்தீனத்தை நிர்வகிக்கவும் போருக்குப் பிந்திய அன்றாட செயல்பாடுகளைப் பார்த்துக்கொள்ளவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமைதி வாரியம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைதி வாரியத்தின்கீழ் செயல்படும். அந்த வாரியத்திற்குத் திரு டிரம்ப் தலைமையேற்கவிருக்கிறார்.
காஸாவில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பாலஸ்தீன காவல்துறைப் பிரிவுகளுக்குப் பயிற்சி அளிக்கவும் அனைத்துலக உறுதிப் படையை அமைக்கத் திட்டமிடப்படுகிறது.
அமெரிக்காவின் ஆதரவு கொண்ட காஸா அமைதித் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அதையடுத்து உடன்பாட்டின் இரண்டாம் கட்டம் சில நாள்களுக்குமுன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும், அதனை முழுமையாக அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஹமாஸ் தரப்பு முழுமையாக ஆயுதங்களைக் களைய ஒப்புக்கொள்ள மறுத்துள்ளது.
ஹமாஸ் அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் திரு டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ட்ருத் சோஷல் தளத்தில் பதிவிட்டார்.
இதற்கிடையே, ஹமாஸ் அதன் தலைமைத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்ப உள்வட்டத் தேர்தலை நடத்தத் தயாராகிறது.

