சுயமாக மின்சாரம் தயாரிக்கும் காஸா மக்கள்

சுயமாக மின்சாரம் தயாரிக்கும் காஸா மக்கள்

படம்: ஏஎஃப்பி

06 Nov 2026 - 7:37 pm

2 mins read

கான் யுனிஸ்: இஸ்ரேல்- ஹமாஸ் போரால் மின்சாரம் இன்றி காஸாவில் தவிக்கும் பாலஸ்தீன மக்கள், சுயமாக அதைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கண்ணில் படும் இறும்புச் சிதைவுகளையும் அங்காங்கே சேகரித்த இடிபாடுகளையும் கொண்டு சிறிய காற்றாலைகளை அவர்கள் தயாரித்துள்ளனர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி காஸாவில் மின்சார உற்பத்தி, விநியோகக் கட்டமைப்பில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு அழிந்துவிட்டதாக உலக வங்கி குறிப்பிட்டது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலை அடுத்து போர் மூண்டது.

அந்தப் போருக்குப் பின் கிட்டத்தட்ட மூவாண்டுகள் கடந்த நிலையில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

மின்விளக்கு, விசிறி ஆகியவை இயங்க மக்கள் உருவாக்கிய காற்றாலை உதவுகிறது.
மின்விளக்கு, விசிறி ஆகியவை இயங்க மக்கள் உருவாக்கிய காற்றாலை உதவுகிறது. - படம்: ஏஎஃப்பி

ஒரு சூரியச் சக்தி தகடை வாங்குவதற்கான விலை குறைந்தது 15,000 ‌ஷெக்கல்ஸ் அதாவது கிட்டத்தட்ட $4,690 அமெரிக்க டாலர்.

வேலைவாய்ப்புகளும் போதிய வருமானமும் இன்றி தவித்துவரும் காஸா மக்கள் மின்சாரம் இன்றி திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அப்போதுதான் சுயமாகக் காற்றாலையை உருவாக்கும் எண்ணம் காஸா மக்களுக்கு உதித்தது.

ஸ்கூட்டரின் இயந்திரங்களிலும் தகடுகளாக வெட்டப்பட்ட பழைய தண்ணீர்த் தொட்டிகளும் மின்சாரத்தைத் தயாரிப்பதில் கைகொடுக்கின்றன.

உற்பத்தியாகும் மின்சாரம், கைப்பேசிகளுக்கு மின்னூட்டம் செய்யவும் விளக்குகள் விசிறிகள் ஆகியவை இயங்கவும் போதுமானதாக இருக்கிறது.

காஸா மக்களில் ஏறக்குறைய அனைவரும் போர் காரணமாகக் குறைந்தது ஒரு முறையாவது வீடுகள் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சுகாதாரப் பராமரிப்பு, மருந்து ஆகியவற்றுக்கான தட்டுப்பாடும் காஸாவில் நிலவுவதால் மருத்துவக் கருவிகள் தொடர்ந்து செயல்பட சுயமாக உற்பத்தி செய்யும் மின்சாரம் காஸா மக்களுக்குத் துணை புரிகிறது.

ஸ்கூட்டரின் இயந்திரங்களிலும் தகடுகளாக வெட்டப்பட்ட பழைய தண்ணீர்த் தொட்டிகளும் காற்றாலையாக உருவாக்கப்பட்டன.
ஸ்கூட்டரின் இயந்திரங்களிலும் தகடுகளாக வெட்டப்பட்ட பழைய தண்ணீர்த் தொட்டிகளும் காற்றாலையாக உருவாக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்