காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: மூத்த ஹமாஸ் தளபதி மரணம்

காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: மூத்த ஹமாஸ் தளபதி மரணம்

படம்: ஏஎஃப்பி

15 Nov 2026 - 4:24 pm

2 mins read

காஸா: இஸ்ரேல்மீது 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்த உதவிய ஹமாஸ் படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.

அதை ஹமாஸ் படையினர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) உறுதிப்படுத்தினர். இஸ்ரேலிய ராணுவமும் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியது.

ரஃபா படை அணியின் தளபதி சமீர் அபு யூனிஸ், 53, சனிக்கிழமை கொல்லப்பட்டார். தெற்கு காஸாவில் நடந்த தாக்குதலில் அவர் மாண்டார்.

முந்தைய தளபதி நாயேல் அபு ஒபெய்ட் செப்டம்பர் மாதம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பிறகு சமீர் அந்தப் படைக்குத் தலைமை தாங்கினார்.

தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியின் மாவாசி வீதி ஒன்றில் சமீர் குறிவைக்கப்பட்டார். அவருடன் இருந்த சிலர் காயமடைந்தனர்.

1991ஆம் ஆண்டு ஹமாஸ் ஆயுதப் பிரிவில் இணைந்த சமீர் பல மூத்த பொறுப்புகளை ரஃபாவில் வகித்தார் என்று ஹமாஸ் தெரிவித்தது.

அவரது இறுதிச் சடங்கு கான் யூனிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான பெரிய மோதல்கள் நிறுத்தப்பட்டன.

இருப்பினும் இஸ்ரேலியத் தாக்குதல்களோ ஹமாஸ் ஆயுதக் களைவோ முடிவுக்கு வரவில்லை.

போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு குறைந்தது 1,600 பாலஸ்தீனர்களும் 5 இஸ்ரேலிய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 7 தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு காசாவுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடுத்த போரில் 74,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்