சண்டக்கான்: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள சண்டக்கான் பகுதியில் 200 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை பிடிபட்டது.
கிட்டத்தட்ட 2.7 மீட்டர் நீளமுள்ள முதலையை சாபா குடிமைத் தற்காப்புப் படையினர் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை கம்போங் சுங்கை ஒபாரில் நிகழ்ந்தது.
அந்த முதலை நாய் ஒன்றைத் துரத்தியதாகவும் அதன் பிறகு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குடிமைத் தற்காப்புப் படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குடியிருப்புப் பகுதிகளை நோக்கி அந்த முதலை நகர்ந்து செல்வதைப் பார்த்துப் பதறிய கிராமவாசி ஒருவர் அதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் முதலையின் வாயைக் கயிற்றால் இறுக்கிக் கட்டினர். அது மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளாமல் இருக்க போர்வையால் அதன் கண்களைக் கட்டினர்.
முதலையைப் பிடிக்க மொத்தம் 49 நிமிடங்கள் எடுத்தததாக அதிகாரிகள் கூறினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. முதலையைப் பிடிக்கும் பணியில் எட்டு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள், குறிப்பாக ஆறுகள் அருகில் வசிப்போர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காட்டு விலங்குகள் அல்லது அபாயகரமான விலங்குகளைப் பார்த்தால் உடனடியாக அவசரச் சேவை எண்ணை அழைக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

