புதுடெல்லி: பூட்டானில் பனிப்பாறை ஏரியைச் சுற்றியிருந்த கரைப் பகுதி திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனால், எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பூட்டானின் வடமேற்குப் பகுதியின் காசா மாவட்டத்தில் ஷிந்தாபு என்ற பனிப்பாறை ஏரி அமைந்துள்ளது.
வியாழக்கிழமை (அக்டோபர் 29) மாலை இந்த ஏரி திடீரென உடைந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மோ சூ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பிரபல இயற்கை ஊற்றான காசா சாச்சு பகுதியில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
எனினும், முன்னதாகவே அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
பூட்டானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, அசாமின் துப்ரி மாவட்டம், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதி, அலிபுர்துவார், ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், மேற்கு வங்கத்தில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், அலிபுர்துவார் மாவட்டத்தின் குமார்கிராம் பகுதியில் உள்ள சங்கோஷ் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றுமாறு மேற்கு வங்காள வனத்துறை அமைச்சர் மனோஜ் ஓரோன் வியாழக்கிழமை இரவு கேட்டுக்கொண்டார்.
எனினும், திடீர் வெள்ளத்தால் காயங்களோ உயிரிழப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்று பூட்டான் அரசாங்க ஊடகமான பூட்டான் ஒலிபரப்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்தது.
நள்ளிரவில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் முழு விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருள் மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதங்களை மதிப்பிடும் பணி பாதிக்கப்பட்டதாக அது கூறியது.
ஷிந்தாபு ஏரி பூட்டானின் 17 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
