பெய்ஜிங்: சீனாவின் ஹைனான் மாநிலத்தில் வரிவிலக்குள்ள (duty-free) பொருள்கள் மீது செய்யப்பட்ட செலவு சென்ற ஆண்டு 29.3 விழுக்காடு சரிந்தது.
பொருளியல் வலுவிழந்திருப்பதால் உள்ளூர் வருகையாளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்திருப்பது அதற்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய கடற்கரைகள், பிரமாண்டமான கடலோர ஹோட்டல்கள் ஆகியவற்றுக்குப் பேர்போன ஹைனானில் உலகளவில் பிரபலமான எல்விஎம்எச், கெரிங் (LVMH, Kering) போன்ற நிறுவனங்கள் கடைகளை நடத்துகின்றன.
சென்ற ஆண்டு அம்மாநிலத்தில் மக்கள் வரிவிலக்குள்ள பொருள்களை வாங்க 30.94 பில்லியன் யுவான் (5.8 பில்லியன் வெள்ளி) செலவு செய்தனர். அத்தொகை, ஆண்டு அடிப்படையில் 29.3 விழுக்காடு குறைவாகும்.
அதேபோல், பொருள்களை வாங்க ஹைனான் சென்றோரின் எண்ணிக்கையும் குறைந்தது. 2023ல் 6.76 மில்லியனாக இருந்த வருகையாளர் எண்ணிக்கை சென்ற ஆண்டு 15.9 விழுக்காடு குறைந்து 5.68 மில்லியனாகப் பதிவானது.
வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட பெல்ஜிய நாட்டின் பரப்பளவைக் கொண்டிருக்கும் தீவான ஹைனானை இவ்வாண்டு வரிவிலக்குப் பொருள் விற்பனைக்கான வட்டாரமாக உருவெடுக்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு காணப்பட்ட சரிவு அத்திட்டத்துக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

