ஜெருசலம்/ கெய்ரோ/ தோஹா: ஹமாஸ் பிடியிலிருந்த எஞ்சிய 20 இஸ்ரேலியப் பிணையாளிகளும் சண்டைநிறுத்த உடன்பாட்டின்கீழ் திங்கட்கிழமை (அக்டோபர் 13) விடுவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, டெல் அவிவ் நகரில் உள்ள பிணையாளி சதுக்கத்தில் திரண்ட மக்களிடையே உற்சாகமும் களிப்பும் கரைபுரண்டது.
கிட்டத்தட்ட ஈராண்டாக இந்த நாளுக்காகக் காத்திருந்த உற்றார் உறவினர் விடுவிக்கப்பட்ட பிணையாளிகளை ஆரத் தழுவி, கண்ணீர்விட்டு பாசத்தைப் பொழிந்தனர்.
காஸாவில் கிட்டத்தட்ட ஈராண்டாக நீடித்த போர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சமரச முயற்சிகளைத் தொடர்ந்து ஒருவழியாக முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
காஸாவிலிருந்து செஞ்சிலுவைச் சங்கத்திடம் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட அனைத்து பிணையாளிகளையும் வரவேற்றதை இஸ்ரேலிய ராணுவமும் உறுதிப்படுத்தியது.
இதற்கிடையே, இஸ்ரேலியச் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனர்களும் காஸாவைச் சென்றடைந்ததாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரை
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜெருசலத்தைச் சென்றடைந்தார். அவருக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, “எத்தனை நாள்கள் இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தோம். திரு டிரம்ப்புக்கு நாட்டின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“திரு டிரம்ப் முன்வைத்த சமாதானத் திட்டம் அமைதிக்கான மிக முக்கியப் படிக்கல்,” என்று திரு நெட்டன்யாகு வருணித்தார்.
“யூதர்களின் நாள்காட்டியில் இன்று ஈராண்டுப் போர் முடிவுக்கு வந்த நாள்,” என்ற திரு நெட்டன்யாகு, போரில் மாண்ட அனைத்து இஸ்ரேலிய வீரர்களின் பெயர்களையும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
திரு நெட்டன்யாஹூவை அடுத்து பேசிய திரு டிரம்ப், “மத்தியக் கிழக்கில் இது புதிய வரலாற்று உதயம்,” என்றார்.
சமரசப் பேச்சில் ஈடுபட்ட அரபு நாடுகளுக்கும் திரு டிரம்ப் நன்றிக் கூறினார். “இது அபார வெற்றி. இஸ்ரேலுக்கு இனி பொற்காலமாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
திரு டிரம்ப் முன்வைத்த 20 அம்ச திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இனி கலந்துரையாடுவர்.
2023, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைப் பிடிக்கப்பட்டனர்.
காஸாமீது ஆகாயவழியாகவும் தரைவழியாகவும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 67,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் பல இடங்கள் பாழ் நிலங்களாகின.