தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் உள்ள பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும்; டிரம்ப் கடும் எச்சரிக்கை

2 mins read
3cea1a4c-c28b-49aa-9108-75a7ced7cef5
அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்ட டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்ட டோனல்ட் டிரம்ப், ஹமாஸ் போராளிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாம் அதிபராக பொறுப்பேற்பதற்குள் காஸாவில் உள்ள பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று திரு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர்

பிணைக் கைதிகளில் 101 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக நம்பப்படுகிறது.

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், இதுவரை இல்லாத அளவில் பதிலடி தரப்படும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளில் 33 பேர் மாண்டுவிட்டதாக ஹமாஸ் திங்கட்கிழமை (டிசம்பர் 2) தெரிவித்துள்ளது.

மாண்டவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை ஹமாஸ் வெளியிடவில்லை.

பிணைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் காஸாமீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் காஸாவில் இருக்கும் இஸ்ரேலியப் படையினர் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் போராளிகளை ஒழித்துக்கட்டாமல் போரை நிறுத்த மாட்டேன் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதியாக உள்ளார். இஸ்ரேலின் அமைதிக்கு அவர்கள் தொல்லையாக இருப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

14 மாதங்களுக்கு மேலாக காஸாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் 44,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்