தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ஹார்வர்டுக்கு ஆறு மாதத் தடை

2 mins read
33a5fc0b-7a92-46b6-a310-40ec46ded6e3
ஹார்வர்ட் பல்கலைக்கழகம். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

அதற்கான உத்தரவில் திரு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தத் தடை முதலில் ஆறு மாத காலத்துக்கு நடப்பில் இருக்கும். மாணவர் பரிமாற்றத் திட்டங்களின்கீழ் ஹார்வர்ட் செல்லும் மாணவர்களுக்கும் இந்தத் தற்காலிகத் தடை பொருந்தும்.

தேசியப் பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். திரு டிரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலளித்த ஹார்வர்ட், இந்நடவடிக்கை அதன் உரிமையைப் பறிக்க திரு டிரம்ப்பின் பழிவாங்கும் செயல் என்று சாடியது.

“ஹார்வர்ட் தொடர்ந்து அனைத்துலக மாணவர்களைப் பாதுகாக்கும்,” என்று அது எடுத்துரைத்தது.

ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகத் தடை ஆறு மாதங்களையும் தாண்டி நீட்டிக்கப்படலாம். தடை உத்தரவில் இடம்பெறும் அம்சங்கள் பொருந்தும் தற்போதைய ஹார்வர்ட் மாணவர்களின் கல்வி பயிலும் உரிமை அல்லது மாணவர் பரிமாற்ற விசாவும் மீட்டுக்கொள்ளப்படலாம்.

பாஸ்டன் நகர நீதிபதி ஒருவர், ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளத் தடை விதிப்பதற்கு எதிராக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்போவதாகக் கூறியிருந்தார். அதற்கு ஒரு வாரம் கழித்து புதன்கிழமை (ஜூன் 4) இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆகப் பழைமையான, ஆகச் செல்வமிக்க பல்கலைக்கழகமான ஹார்வர்டுக்கு எதிராக திரு டிரம்ப்பின் அரசாங்கம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தப் பல்கலைக்கு வழங்கப்பட்ட பில்லியன் கணக்கிலான நிதியுதவி நிறுத்தப்பட்டது. ஹார்வர்டுக்கு வழங்கப்பட்டுவந்த வரி விலக்கை அகற்றவும் பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

டிரம்ப் அரசாங்கம், தங்கள் கல்வி நிலையம் நடத்தப்படும் விதம், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்களில் தலையிட நினைப்பதாகவும் அதற்கு இணங்காததால் தங்கள் மீது பழி தீர்ப்பதாகவும் ஹார்வர்ட் கூறிவருகிறது.

குறிப்புச் சொற்கள்