அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்குத் தொடுத்துள்ளது. பல்கலைக்கழகத்துக்கான பல பில்லியன் டாலர் நிதியைமுடக்கப்போவதாகத் திரு டிரம்ப் கூறியதை நிறுத்த அந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
பல்கலையில் உள்ள பன்முக முயற்சிகளை முடக்குவதற்காகவும் மதவெறியை எதிர்ப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிபந்தனைகளை டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திடம் கொடுத்தது.
பல்கலைக்கழகம் அதை நிராகரித்ததை அடுத்து அதற்கும் டிரம்ப் நிர்வாகத்துக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் டாலர் மத்திய அரசாங்க நிதியை முடக்கியதோடு திரு டிரம்ப் அதன் வரி விலக்கு தகுதியையும் ரத்து செய்யப்போவதாக மிரட்டினார்.
“ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களுக்கான மத்திய உதவிநிதி ஒரு முடிவுக்கு வருகிறது. வரி செலுத்துவோரிடமிருந்து வரும் பணம் ஒரு சலுகை. அந்தச் சலுகையைப் பெறுவதற்கான அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய ஹார்வர்ட் தவறிவிட்டது,” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஹெரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார்.
மத்திய உதவிநிதி முடக்கப்பட்டதால் குழந்தை புற்றுநோய், அல்சைமர், பார்கின்சன் ஆகிய நோய்களுக்கான முக்கிய ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.
“இத்தகைய விலைமதிப்பில்லாத ஆய்வுகளுக்கு உதவிய முக்கிய நிதி பங்காளித்துவம்மீது மத்திய அரசாங்கம் அண்மை வாரங்களில் கடுமையாக தாக்கிவருகிறது,” என்று பல்கலைக்கழகம் அதன் வழக்குப் பதிவில் குறிப்பிட்டது.
மத்திய நிதியைப் பிடித்துவைப்பதன் மூலம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக முடிவுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயல்வதாக அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
உதவி நிதியை முடக்கியதோடு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் எப்படி அனைத்துலக மாணவர்களை சேர்க்கும் என்று டிரம்ப் நிர்வாகம் அண்மை நாள்களில் மிரட்டியது.