சோல்: தென்கொரியாவில் பல நாட்களாகப் பெய்துவரும் கனமழையில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அலுவலகம் தெரிவித்தது. அத்துடன், 12 பேர் காணவில்லை என்றும் அது கூறியது.
பேரிடர் மீட்புப் பணி முயற்சிகள் அதிகரித்துவரும் நேரத்தில் மாண்டோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கேப்யோங் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சகதிற்கு இடையில் மக்கள் உழன்று நடப்பதை அங்கு எடுக்கப்பட்ட காணொளிகள் சில காட்டுகின்றன.
மத்திய சுன்சியோங் பகுதியில் மொத்த ஊரே மண்ணாலும் சிதைவுகளாலும் போர்த்தப்பட்டிருந்ததையும் காணொளிகள் காண்பித்தன.
பெருமளவு சேதம் நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ளது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காணாமல் போயினர்.
புதன்கிழமை தொடங்கிய கனமழையால் ஏறத்தாழ 10,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 41,000க்கும் அதிகமான வீடுகளில் தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு, மத்திய பகுதிகளில் மழை பெருமளவில் ஒய்ந்துள்ளபோதும், பெருமழை வடக்குமுகமாக நகர்ந்துள்ளது.
தென்கொரியாவின் வடக்குப் பகுதியிலும் கூடுதல் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சிறப்புப் பேரிடர் வட்டாரங்களாக அதிபர் லீ ஜெய் மியூங் அறிவித்துள்ளார்.

