தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய மாநிலங்களில் தொடர்ந்து 3 நாள்களுக்கு கனமழை: வானிலை மையம்

2 mins read
5d5ed4da-b865-47c5-bfeb-0b518e1f608b
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூத்தோருக்கு உதவும் தீயணைப்பு வீரர்கள். - படம்: ஃபேஸ்புக் / ஜோகூர் மாநிலத் தீயணைப்பு, மீட்புத் துறை

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சில மாநிலங்களில் புதன்கிழமை (ஜனவரி 15) தொடங்கி, மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.

ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை நாட்டைப் பாதிக்கவிருக்கும் பருவமழையால் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியது.

கடும் மழையால் மலேசியத் தீபகற்பத்தில் உள்ள சில மாநிலங்கள், சரவாக்கின் தெற்கு, மேற்குப் பகுதிகள், சாபா ஆகியவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.

“பொதுமக்கள் மலேசிய வானிலைத் துறையின் இணையத்தளத்தையும் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களையும் நாடுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது,” என்று வானிலைத் துறை கூறியது.

இந்நிலையில், ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) காலை நிலவரப்படி, மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதற்கு முந்திய நாள் இரவு 2,524 என்று பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் அது அதிகம்.

கோத்தா திங்கி, கூலாய், ஜோகூர் பாரு, குளுவாங், பொந்தியான் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 3,295 பேர் பாதிக்கப்பட்டதாக மலேசியாவின் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.

அவர்கள் 34 தற்காலிக மீட்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோத்தா திங்கியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆக அதிகமாக 1,160ஆகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து, கூலாயில் 748 பேரும், ஜோகூர் பாருவில் 502 பேரும், குளுவாங்கில் 455 பேரும், பொந்தியானில் 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் பத்து பகாட், மெர்சிங் உள்ளிட்ட வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்