வாஷிங்டன்: சீனாவின் ஷென்ஸென் நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள உச்சநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் முதன்முறையாக முத்தரப்புச் சந்திப்பை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்துள்ளது.
அந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், அணுவாயுதங்களைக் குறைப்பது பற்றி டிரம்ப் பேச விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, ஈரானில் நடைபெற்றுவரும் போர் குறித்தும் அவர் பேசப்போவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பற்றி அவர் கலந்துபேச சாத்தியமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தென்சீன நகரமான ஷென்ஸெனில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டிற்கு இடையே அந்த மூன்று தலைவர்களும் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
முதன்முறையாக நடைபெறவுள்ள அந்தச் சந்திப்பில், அணுவாயுதக் குறைப்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, வர்த்தகத்தையும் வணிகத்தையும் மையமாகக் கொண்டு உச்சநிலை மாநாட்டை நடத்தும் சீனாவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அணுவாயுதக் கையிருப்பைக் கொண்டுள்ள ரஷ்யாவுடனும் அமெரிக்காவுடனும் அணுவாயுதங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளைச் சீனா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
“அணுவாயுத விவகாரம் தொடர்பாக எந்தவோர் ஒப்பந்தமும் எட்டப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“சீனாவுக்கு இது ஒரு சிரமமான விவகாரம்தான். இருப்பினும், சீனா முன்வந்து பொறுப்புடன் முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் இது என்று நாங்கள் கருதுகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
“எதிர்காலத்தில் ஆக்கபூர்வமானதாக அமையக்கூடிய ஒரு பேச்சுவார்த்தையின் தொடக்கமாக இது இருக்கும் என்று நம்புகிறோம்,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
