ஹாங்காங்: : நடந்துமுடிந்துள்ள தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்றம், நகரில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என்று அதன் நிர்வாகத் தலைவர் ஜான் லீ திங்கட்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர்களது பணிகளைத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் சீனா கட்டாயமாக்கிய விதிகளின்படி இரண்டாம் முறையாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் நாட்டின் 4.14 மில்லியன் மக்களில் 1.32 மில்லியன் பேர் வாக்களித்தனர். அந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டைவிடக் குறைவாகும்.
சீன அரசாங்கமே போட்டியிட்ட 161 தேர்தல் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தது. அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பது முக்கிய விதி.
கடந்த கால ஹாங்காங் தேர்தல்கள், சீன அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் ஜனநாயகக் கட்சிகளுக்கும் இடையே நடந்துவந்தன. அதில் வழக்கமாக ஜனநாயகக் கட்சிகள் 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றுவந்தன. அத்தகைய தேர்தலுக்குப் பிறகு வன்முறைகள் அடிக்கடி வெடித்ததால் சீன அரசாங்கம் 2021ல் விதிமுறைகளை மாற்றியமைத்தது.
புதிய விதிமுறைகளின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. ஹாங்காங்கில் 2021க்குமுன் இருந்த இரு ஜனநாயகக் கட்சிகளில் குடிமைக் கட்சி 2023ல் கலைக்கப்பட்டது. மற்றொரு ஜனநாயகக் கட்சி தற்போது செயல்பாட்டை இழந்துள்ளது. விரைவில் அக்கட்சியும் கலைக்கப்படும்.
மேலும், கடந்த மாத இறுதியில் நடந்த வரலாறு காணாத தீவிபத்தில் நடந்த உயிர்ச்சேதம், தேர்தலுக்கான விளம்பரங்களைக் கட்டுப்படுத்திவிட்டது. 159 பேர் உயிரிழந்த அந்த தீயில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு மாற்று இடங்களுக்குச் செல்ல நேரிட்டது.
“நடந்த பேரிடரில் இருந்து மீண்டு வரும் அரசாங்கத்தின் கடப்பாட்டுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் நிர்வாகச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் திறன்பெற்ற சட்டமன்ற வேட்பாளர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்,” என்று ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் ஜான் லீ கூறினார்.

