கான்பெரா: ஈரான் போரில் தனக்குக் கைகொடுப்பதிலும் ஹோர்முஸ் நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும் ஆஸ்திரேலியா கைகொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறைகூறி வந்துள்ளார். அதன் தொடர்பில் அவருடன வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
வரும் 2033ஆம் ஆண்டுக்குள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்காப்புக்கான செலவை மூன்று விழுக்காட்டுக்கு உயர்த்தப்போவதாக ஆஸ்திரேலியா கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 15) அறிவித்தது. அவ்விகிதம் 3.5 விழுக்காடாக இருக்கவேண்டும் என்பது வாஷிங்டனின் விருப்பம்.
ஆஸ்திரேலியாவின் இத்திட்டம் தமக்குத் திருப்தியாக உள்ளதா என்று திரு டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்காத அவர், தங்களுக்கு உதவாத காரணத்தினால் ஆஸ்திரேலியாவிடம் தமக்கு வருத்தம் இருப்பதாக மட்டும் சொன்னார்.
ஈரான் தொடர்பில் அமெரிக்கா தங்களிடம் உதவி கேட்கவில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசின் அரசாங்கம் தொடர்ந்து கூறி வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்களுடனான நேர்காணல்களில் ஆஸ்திரேலியாவின் மூத்த அமைச்சர்கள் பலர் இந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் தராத வகையில் பேசியிருக்கின்றனர்.
“இதுபோன்ற விவகாரங்களில் அதிபர் டிரம்ப்புடன் எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபட எனக்கு விருப்பமில்லை,” என்று ஆஸ்திரேலிய நிதித் துணை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார். ஜி-20 கூட்டமைப்புச் சந்திப்பில் கலந்துகொள்ள அவர் அங்குச் சென்றிருந்தார்.
ஆஸ்திரேலியத் தணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்சும், “அமெரிக்க அதிபர் சொல்வது குறித்து நான் கருத்துரைக்கப்போவதில்லை,” என்று வானொலி நேர்காணலில் சொன்னார்.

