வீடுகள் மூழ்கின; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

தென்சீனாவில் பெருவெள்ளம்; ஜப்பான், தைவானை அச்சுறுத்தும் புயல்

வீடுகள் மூழ்கின; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

2 mins read
3b1179d0-5815-4826-8a4f-a9ff4b31d8b6
சீனாவில் ‘நாரா’ புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப் பணியாளர்கள் படகு மூலம் வெளியேற்றுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

ஹாங்காங்: தென்சீனாவில் ‘நாரா’ புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடுகள், கடைகள் நீரில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புயல் ஜப்பான், தைவான் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

சீனாவின் குவாங்சி வட்டாரத்தில் உள்ள சோங்சுவோ நகரில் வெள்ள நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மலைகளும் நீர்வீழ்ச்சிகளும் நிறைந்த அப்பகுதியில் 15,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அங்கு இதுவரை 54,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சீன அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

டோங்கின் வளைகுடா பகுதியில் நாரா புயல் தொடர்ந்து நீடிப்பதால் குவாங்சி, ஹைனான், குவாங்டாங் ஆகிய மாநிலங்களில் கனமழை நீடிக்கிறது.

சோங்சுவோ நகரில் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து நகருக்குள் புகுந்ததால் சில கட்டடங்களின் கூரைகள், மின்கம்பங்கள்வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கு வணிக நிறுவனங்கள், சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள நஹா நகரில் மழையையும் பொருட்படுத்தாமல் செல்லும் மக்கள்.
ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள நஹா நகரில் மழையையும் பொருட்படுத்தாமல் செல்லும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

இதற்கிடையே, மிதமான வலிமை கொண்ட ‘சௌடேல்’ புயல் தென்ஜப்பான், வடதைவான் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜப்பானின் ஒகினாவா தீவுப் பகுதிகளைப் புயல் நெருங்குவதால் கடுமையான காற்றும் கடல் கொந்தளிப்பும் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகினாவாவிற்குச் செல்லும் 279 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 41,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருகின்றனர்.

நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி தெரிவித்தார்.

தைவானில் வீசிய மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தைனான், காஹ்சியுங் நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்தார், நால்வரைக் காணவில்லை.

சௌடேல் புயல் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் சீன நகரமான புஜியான் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்