தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் வெள்ளம்: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

2 mins read
723a9b2f-1476-4ea1-9d31-1fd6cec7fb1e
தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தா திங்கி. - படம்: kosmo.com.my / இணையம்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) காலை முதல் பெய்துவரும் மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ள நீர் அதிகரித்து வருவதால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருபவர்களுக்குத் தற்காலிக நிவாரண நிலையங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை (ஜனவரி 11) காலை எட்டு மணி நிலவரப்படி 303 குடும்பங்களைச் சேர்ந்த 897 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 13 தற்காலிக துயர் துடைப்பு மையங்களுக்கு இடம் மாற்றப்பட்டிருப்பதாக ஜோகூர் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இதுவரை கோத்தா திங்கி மாவட்டம் மட்டும்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜோகூர் லாமாவில் உள்ள தாமான் அமான், தாமான் மாவாய் ஆகிய இடங்களில்தான் ஆக அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 161 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் எஸ்ஜேகேசி நியூ கோத்தா, கோத்தா திங்கியில் உள்ள ரென்டா சுங்கை பள்ளி, எஸ்கே லக்சமானா ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்று ஜோகூர் பேரிடர் நிர்வாகக் குழு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

குளுவாங்கில் உள்ள சுங்கை என்டாவ், சியாம் கம்பத்துக்கு அருகே உள்ள சுங்கை ஜோகூர், உலு புலாய் கம்பம் அருகேயுள்ள சுங்கை புலாய், லாவுட் கம்பத்துக்கு அருகிலுள்ள சுங்கை ஸ்கூடாய், மற்றும் சுங்கை தெப்ராவ் ஆகிய ஐந்து ஆறுகளில் அபாயகரமான அளவில் நீர் சேர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கோத்தா திங்கியின் பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பேராக் மாநிலத்தில், பெருவாசில் உள்ள பிபிஎஸ் அகாமா ரக்யாட் பாடாங் செராய் பள்ளியில் தஞ்சம் புகுந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 என்று மஞ்சுங் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்