பெய்ஜிங்: சீனாவின் குவாங்சி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக, அங்குள்ள வளர்ப்புப் பண்ணைகளிலிருந்து நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் தப்பிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பாரம்பரிய மருத்துவத்துக்கு பாம்புகளின் தோல் பயன்படுகிறது. அதன் இறைச்சியும் உணவாக அந்த மாநிலத்தில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.
ஏறத்தாழ 3 கோடி பாம்புகள் வளர்க்கப்படுகின்ற மாநிலம் குவாங்சி. அங்கு வெள்ளநீர் சூழ்ந்ததால் ஆபத்தான நல்லபாம்புகள் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட பலவகை பாம்புகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளன.
வெள்ளத்தில் பாம்பால் கடிபட்ட பெண் ஒருவர், சாலைகள் அங்கு நீரில் முடங்கியதால் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமாகி உயிரிழந்தார்.
பாம்புகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவசரச் சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
பாம்புகள் மட்டுமல்லாது, இந்தப் புயல், வெள்ளத்தால் பன்றிப் பண்ணைகள், மல்லிகைத் தோட்டங்கள் உட்பட மரத் தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், குகாங் நகர உயிரியல் பூங்காவின் கூண்டுகள் சேதமடைந்ததால் வரிக்குதிரைகள், நெருப்புக் கோழிகள் ஆகியவற்றுடன் 30 மயில்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் காணாமல் போயுள்ளன.
அவற்றைத் தேட உதவுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகளால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

