வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், தமது ஆலோசனைப் பிரிவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா, நிரந்தரவாச அட்டை (கிரீன் கார்டு) ஆகியவற்றுக்கான ஆதரவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா நடைமுறைகளைக் கடுமையாக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
உள்நாட்டுத் திறனாளர்களை அதிகம் பணியமர்த்துமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கடுமையான நெருக்குதல் அளித்து வருகிறது.
எச்-1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்துவது, அதிக சம்பளம் தரும் நிறுவனங்களுக்குக் குலுக்கல் முறையில் முன்னுரிமை அளிப்பது போன்ற மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விசா நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள்மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐபிஎம் நிறுவனத்தின் இந்த முடிவால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள், அமெரிக்காவிற்கு வெளியே அந்நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றலாம். இல்லையெனில், இந்த ஆண்டு இறுதியில் நிறுவனத்தைவிட்டு விலகலாம் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக புளூம்பெர்க் குறிப்பிட்டது.
ஐபிஎம் ஆலோசனைப் பிரிவில் 150,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மென்பொருள் நிறுவனமாகத் தன்னை மறுவடிவமைத்துகொள்ளும் நோக்கில் ரெட் ஹேட் உள்ளிட்ட நிறுவனங்களை ஐபிஎம் வாங்கியது.
எனினும், அதன் ஆலோசனைப் பிரிவின் வளர்ச்சி அண்மைக் காலமாக மந்தமாகவே உள்ளது. திறன்களின் இருப்பு, வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறியுள்ளதால் விசா ஆதரவை நிறுத்துவதாக அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
