வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றால் தாமே ‘நிராகரிக்கும் ஆணையாக’ மாறவேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) ஒளிபரப்பான நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.
“ஜனநாயகக் கட்சியினர் முன்வைக்கும் விவகாரங்களை நிராகரிக்கவேண்டியதுதான். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து முன்வைக்கப்படும் விவகாரங்கள் அனைத்தையும் நிராகரிக்கும்போது அவர்களாகவே முன்வந்து ஒப்பந்தம் செய்துகொள்வர்,” என்றார் திரு டிரம்ப்.
திரு டிரம்ப்பின் கருத்து, எதிர்வரும் இடைத்தேர்தலில் தமது குடியரசுக் கட்சி தோற்றுவிடலாம் என்று ஒப்புக்கொள்வதுபோல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கூடுதலான பிரசாரங்களுக்குத் திரு டிரம்ப் கன்சஸ், ஐயோவா மாநிலங்களுக்குச் செல்லவிருக்கிறார்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், ஈரான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களைக் கவர தமது குடியரசுக் கட்சியின் இரும்புக்கோட்டைகளாக உள்ள மாநிலங்களுக்கும் திரு டிரம்ப் பயணம் செய்து இடைவிடா பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்க மக்களவையின் கட்டுபாட்டைத் தனது வசம் கொண்டுவருவதற்கான மூன்று இடங்களை வெல்லும் பாதையில் ஜனநாயகக் கட்சி இருப்பதாகப் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சுட்டுகின்றன.
அதையடுத்து செனட் சபையிலும் ஆதிக்கம் செலுத்தும் நம்பிக்கை ஜனநாயகக் கட்சியிடையே வலுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
“அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியிருக்காது,” என்று திரு டிரம்ப் தமது நேர்காணலில் கூறினார்.
இருப்பினும், செனட் சபையில் பெரும்பான்மை வகிப்பதற்கான போட்டி கடுமையாகவே இருப்பதாகக் குடியரசுக் கட்சி வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கப் பொருளியல் வரலாறு காணாத அளவு வளர்ச்சியடைந்துள்ளது என்ற திரு டிரம்ப், கருத்துக்கணிப்புகள் குடியரசுக் கட்சியினரின் வாக்குகளைச் சரிவர எடுத்துக்காட்டவில்லை என்றார்.
