பெய்ஜிங்: சீனா அதன் எல்லைகளில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
சீன மக்களின் பயணங்களுக்கான விதிமுறைகளை அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கான மன்றம் புதுப்பித்துள்ளதால், அதன் எல்லைகளைக் கடந்து செல்வோருக்கும் அவற்றுக்குள் வருவோருக்கும் குடிநுழைவு நடைமுறைகள் இனி மிகத் தீவிரமாகும்.
சீனாவின் சட்ட திட்டத்துக்கான மன்றம் பரிந்துரைத்த 19 அம்சங்கள் கொண்ட அந்நாட்டின் வெளியேறுவதற்கும் உள்நுழைவதற்குமான விதிமுறைகளுக்கு ஜூன் 29ஆம் தேதி நடந்த அதன் நிர்வாகக் குழுவின் சந்திப்புக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அந்த ஒப்புதலில் சீனப் பிரதமர் லீ ஷியாங் ஜூலை 22ஆம் தேதி கையெழுத்திட்டு மறுநாள் அரசாணையாக அது அறிவிக்கப்பட்டது.
அந்தப் புதிய விதிகளின்படி, சீனாவைவிட்டு வெளியேற விண்ணப்பம் செய்யும்போது அது உண்மையாகவும் சட்டப்படியும் இருக்கவேண்டும். அதேபோல சீனாவில் தங்குவதற்கும் குடியிருப்பதற்கும் காரணங்கள் உண்மையாகவும் சட்டப்படியும் இருத்தல் அவசியம்.
ஒருவரின் அடையாளத்தையும் எல்லையைக் கடக்கும் காரணத்தையும் சோதிக்கும் குடிநுழைவு, விசா சேவையைச் சார்ந்த அதிகாரிகள் விண்ணப்பதாரர்களை விசாரிப்பதுடன் தேவையான ஆவணங்களையும் மின்னிலக்கத் தரவுகளையும் வழங்கும்படி அவர்களைக் கேட்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களை வழங்கினாலோ, பொய்யுரைத்தாலோ அவர்களுக்கு சீனாவுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் அனுமதி மறுக்கப்படும்.
சீனர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற கட்டுப்பாடுகள்
பிரச்சினைகள் நிறைந்த வெளிநாடுகளுக்கு அந்நாட்டு குடிமக்கள் செல்வதை கட்டுப்படுத்துவதிலும் சீன அதிகாரிகள் கவனம் செலுத்துவர்.
குறிப்பாக ஆயுதப் போராட்டங்கள், குற்றப் பின்னணிகள், இயற்கைப் பேரிடர்கள், பெரும் விபத்துகள், தொற்றுநோய்கள் ஏற்பட்ட நாடுகளுக்குச் செல்ல சீனர்களுக்குப் பயண எச்சரிக்கை வழங்கப்படுவதோடு அதற்கான அனுமதி தீவிரமாக பரிசீலிக்கப்படும்.
கவனத்தைக் கடைப்பிடிக்கும்படி சீனக் குடிமக்களுக்கு பரிந்துரை செய்யப்படுவதோடு தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது என்ற நிலையில் அபாயம் நிறைந்த இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.
பயண எச்சரிக்கை வழங்கப்படுவதால் சீனக் குடிமக்களுக்குக் குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல கட்டாயத் தடை செய்யப்படும் என்று புதிய சட்டத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.


