அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானம் தோல்வி

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானம் தோல்வி

படம்: ஏஎஃப்பி

11 Nov 2026 - 3:40 pm

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி ஈரான்மீது 90 நாள்களுக்கு மேலாகப் போர் தொடுத்ததாகக் கூறி, அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்மீது கொண்டுவரப்பட்ட பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியடைந்தது.

பசிபிக் பெருங்கடலிலும் கரீபியன் கடலிலும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின்போது சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை அவர் வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கென்டக்கி மாநிலக் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸ்ஸி கொண்டுவந்த அத்தீர்மானம், அமெரிக்க மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. இதன்மூலம் அப்பதவிநீக்க முயற்சி தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

திரு மாஸ்சியின் இந்த முயற்சிக்குச் சொந்தக் கட்சியினரே போதிய ஆதரவு அளிக்கவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றவுள்ள நிலையில், பதவிநீக்கத் தீர்மானத்தை அவர்கள் மீண்டும் கையில் எடுக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) செய்தியாளர்களிடம் பேசிய ஹெக்செத், இந்த முயற்சி ஒரு கண்துடைப்பு என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான சதி என்றும் சாடினார்.

முறையான ராணுவ நடவடிக்கைகளை நிறைவேற்றியதற்காக அமெரிக்கா தமது சொந்தப் படைவீரர்களையும் தலைமைத்துவத்தையும் தண்டிப்பதுபோன்ற தவறான கண்ணோட்டத்தை எதிரிகளுக்கு அது கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வாக்கெடுப்பு முடிவை வரவேற்றுப் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாட்டுப் பற்றுமிக்க ஹெக்செத்தின் மீதான பழிச்சொற்கள் தகர்ந்துவிட்டதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஈரான்தற்காப்புஅதிகாரிஅரசியல்குற்றச்சாட்டு