புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பகிர்ந்திருக்கும் ஒரு கருத்து பொருத்தமற்றது என்றும் வலுவான அமெரிக்க - இந்திய உறவுக்கு முரணானது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
பழைமைவாத விமர்சகரான மைக்கல் சாவேஜ் என்பவர் அண்மையில் ‘த சாவேஜ் நேஷன்’ என்னும் வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டார்.
“இங்கு ஒரு குழந்தை பிறந்ததும் நாட்டின் குடிமகனாகிவிடுகிறது. பின்னர், சீனாவிலிருந்தோ இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு ஏதேனும் நரகக்குழியில் இருந்தோ ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் இங்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள்,” என்று சாவேஜ் கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கருத்தை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் கடந்த வியாழக்கிழமை பகிர்ந்தார். அதில் அவர் தமது சொந்தக் கருத்து எதையும் சேர்க்கவில்லை.
“தற்போது இங்கு வந்து சேரும் குடியேறிகளிடம் இந்த நாட்டின்மீது அவ்வளவாக விசுவாசம் இருப்பதில்லை. இதற்கு முன்னர் இப்படி இருந்ததில்லை. ஐரோப்பிய அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்களைப் போன்றவர்களாக அவர்கள் இல்லை,” என்பதும் சாவேஜின் கருத்தாக வலம் வருகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக சாவேஜைத் தொடர்புகொள்ள இயலவில்லை.
இருப்பினும், இந்தியாவைத் தொடர்புப்படுத்தி வெளியிடப்பட்ட கருத்துக்கு இந்தியா கடுமையாகப் பதிலளித்துள்ளது.
“வெளியான கருத்துகள் போதிய புரிதலற்றவை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அத்தகைய கருத்துகள் பொருத்தமற்றவை, நாகரிகமற்றவை,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“இருதரப்பு மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலமாகத் திகழும் இந்திய - அமெரிக்க உறவின் இயல்புநிலையை இவை பிரதிபலிக்கவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது.
“இந்தியா ஒரு சிறந்த நாடு; அதன் உயர்பதவியில் இருப்பவர் எனது மிகச் சிறந்த நண்பர் என அதிபர் கூறியுள்ளார்,” என்று அந்தத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சிடம் ராய்ட்டர்ஸ் கருத்து கேட்டபோது அது உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம்
இந்நிலையில், இந்தியாவைப் பற்றி மைக்கல் சாவேஜ் கூறிய இழிவான கருத்துகளை ஆதரித்து டிரம்ப் பகிர்ந்துள்ளதற்கு இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி எதைக் கண்டு பயப்படுகிறார் எனத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

