இணைய சூதாட்ட மையமாகும் இந்தோனீசியா:அதிகாரிகள் எச்சரிக்கை

இணைய சூதாட்ட மையமாகும் இந்தோனீசியா:அதிகாரிகள் எச்சரிக்கை

2 mins read
தென்கிழக்காசிய நாடுகள் குற்றக் கும்பல்களால் குறிவைக்கப்படுகின்றன
fcc1bd34-cb78-48be-a3c6-56734c5454d3
மேற்கு ஜகார்த்தாவின் ஹாயாம் உரொக் பகுதியில் செயல்பட்ட சூதாட்ட மையத்தில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. - படம்: இந்தோனீசியக் காவல்துறை

https://www.channelnewsasia.com/asia/indonesia-cybercrime-online-scam-hubs-shift-cambodia-thailand-china-6113141

ஜகார்த்தா: எல்லைகடந்த குற்றக்கும்பல்கள் இணைய சூதாட்ட மையங்களை நடத்தவும் மோசடிகளில் ஈடுபடவும் இந்தோனீசியா புதிய மையமாக உருவெடுத்து வருகிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்தனர்.

வளர்ந்துவரும் அந்த அபாயத்தை ஒடுக்க அரசாங்கம் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கத் திட்டமிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கம்போடியா, மியன்மார், வியட்னாம், லாவோஸ் போன்ற இந்தோசீன நாடுகளில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, குற்றக் கும்பல்கள் இந்தோனீசிய நகரங்களைக் குறிவைத்துள்ளதாக இந்தோனீசியாவின் இன்டர்போல் தேசிய மத்தியப் பணியகம் சனிக்கிழமை (மே 9) தெரிவித்தது.

மேற்கு ஜகார்த்தாவில் உள்ள ஹயாம் உரொக் வட்டாரத்தில் இயங்கிய அலுவலகம் உட்பட நாடெங்கும் நூற்றுக்கணக்கான இணைய மோசடிக் கூடாரங்கள் வியாழக்கிழமை (மே 7) நடந்த சோதனைகளில் கண்டறியப்பட்டன என்று அமைப்பின் செயலாளர் உன்தொங் வித்யாத்மொகொ தெரிவித்தார்.

பல வெளிநாட்டவர்கள் அந்தக் கும்பல்களில் செயல்பட்டுள்ளதாக விவரித்த அமைப்பு, கைதான 321 நபர்களில் 228 வியட்னாமியர்களும், 57 சீனர்களும் அடங்குவர் என்று குறிப்பிட்டது.

ஏறத்தாழ இரண்டு மாதங்கள் இணையச் சூதாட்டம் நடந்துள்ளது எனவும் அமைப்பு கூறியது.

பாத்தாம் தீவிலும் நடவடிக்கை

ஹயாம் உரொக் பகுதியில் நடந்த சோதனைக்கு முன்பாக பாத்தாம் தீவிலும் குடிநுழைவுத் துறை, காவல்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். கடந்த வாரம் புதன்கிழமை (மே 6) நடந்த அச்சோதனையில் 210 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

அத்தீவு வழங்கிய விசா இல்லாத அல்லது வந்ததும் விண்ணப்பிக்கும் விசா முறையில் அவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

இந்தோனீசியாவின் டென்பசார், சுரபாயா, யோக்யகார்த்தா, சரகர்த்தா, பொகொர், சுகபூமி போன்ற நகரங்களில் இணைய சூதாட்ட மையங்கள் இயங்கியுள்ளன.

தென்கிழக்காசியாவில் கம்போடியா, மியன்மார் போன்ற நாடுகளில் இருந்த குற்றக்கும்பல்கள், பிலிப்பீன்ஸ், திமோர் லெஸ்தே ஆகிய நாடுகளுடன், மத்திய கிழக்கில் துபாய், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடம் மாறியதாக இந்தோனீசிய ஊடகம், இன்டர்போல் அமைப்பின் திரு உன்தொங்கை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்