ஜகார்த்தா: இந்தோனீசியா, காஸா போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்குத் தற்காலிக அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (ஏப்ரல் 9) கூறியுள்ளார்.
மத்தியக் கிழக்கு வட்டாரத்துக்கும் துருக்கியேவுக்கும் தனது அதிகாரத்துவ பயணத்தைத் தொடங்கிய அவர், அதுகுறித்து பாலஸ்தீனத் தரப்புடன் உடனடியாகக் கலந்துபேசும்படி வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிட்டதாகச் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை காஸாவிலிருந்து இந்தோனீசியாவுக்கு எப்படி கொண்டுவரலாம் என்பதுபற்றி இதர தரப்புகளுடன் பேசும்படி திரு பிரபோவோ கூறினார்.
“காயமடைந்தோருடன் மனத்தளவில் பாதிக்கப்பட்டோரையும் ஆதரவற்றோரையும் காஸாவிலிருந்து வெளியேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று திரு பிரபோவோ குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டோரின் காயங்கள் ஆறி காஸா திரும்ப பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை அவர்கள் இந்தோனீசியாவில் தற்காலிகமாகத் தங்கியிருப்பார்கள் என்று திரு பிரபோவோ சுட்டினார்.
முஸ்லிம்களை அதிகம் கொண்டிருக்கும் இந்தோனீசியா காஸாவில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இன்னும் கூடுதல் பங்களிக்க விரும்புவதாகத் திரு பிரபோவோ கூறினார்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘இரு நாடு’ கொள்கையை உருவாக்கும்படி இந்தோனீசியா வலியுறுத்தி வருகிறது.

