பாத்தாம் தீவின் ஐந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள்மீது விசாரணை

பாத்தாம் தீவின் ஐந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள்மீது விசாரணை

1 mins read
படகு முனையத்தில் வெளிநாட்டவர்களை மிரட்டி பணம் பறித்த விவகாரம்
89ac7274-e9e3-408c-8c35-a2783c901666
பாத்தாம் சென்டர் படகு முனையத்தில் மிரட்டி பணம் வசூலிக்கப்பட்ட விவகாரம் குறித்து மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த இந்தோனீசிய அதிகாரிகள். - படம்: ஜகார்த்தா போஸ்ட்

பாத்தாம்: இந்தோனீசியக் குடிநுழைவுத் துறைக்குப் புதிய தலைமை இயக்குநர் ஹென்டர்சம் மரன்தொகொ பதவியேற்றுள்ளார்.

அவர் பாத்தாம் தீவின் குடிநுழைவு அலுவலகத் தலைவர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளுக்குப் பதிலாக வேறு அதிகாரிகளை அதிரடியாகப் பணி நியமனம் செய்துள்ளார்.

அந்த ஐவர் மீதும் மூன்று மாதங்களுக்கு உள்நாட்டுக் கொள்கை இணக்க இயக்குநரகத்தில் விசாரணை நடக்கவிருக்கிறது. கடந்த சில மாதங்களாகப் பாத்தாம் சென்டர் அனைத்துலகப் படகு முனையத்தில் வெளிநாட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவங்கள் ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதன் விளைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குடிநுழைவு, சீர்திருத்தத் துறை அமைச்சர் அகுஸ் அன்டிரியாத்தோ, ஏப்ரல் 1ஆம் தேதி தற்காலிகத் தலைமை இயக்குநர் குல்டி யுஸ்மானுக்குப் பதிலாக குடிநுழைவுத் துறையின் தலைவராக ஹென்டர்சம் மரன்தொகோவை நியமித்தார்.

திரு மரன்தொகோ, நன்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் ஆவார். பொதுச் சேவையின் தரத்தை மேம்படுத்தி, குடிநுழைவுச் சட்ட அமலாக்கத்தை உறுதியாக்கி, முதலீட்டாளர்களை வரவேற்கும் சூழலை ஏற்படுத்துவதில் அவர் அதிக கவனம் செலுத்துவார்.

குறிப்புச் சொற்கள்