கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்துக்கான புதிய விமானப் பாதைகளை உருவாக்குவது குறித்து ஆராய மாநில அரசாங்கமும் ஏர்ஏஷியா நிறுவனமும் ஒன்றாக ஒரு குழுவை அமைக்கவுள்ளன என்று உத்துசான் மலேசியா ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈப்போவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயணிகள் விமானச் சேவையை ரத்து செய்வதாக ஏர்ஏஷியா இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அம்முடிவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேராக் அரசாங்கமும் ஏர்ஏஷியாவும் தொடங்கவிருக்கும் குழுவில் விமானத் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தரப்புகளும் இடம்பெறும் என்று மாநில சுற்றுலா, தொழில்துறை, முதலீட்டு, தொழில் வழித்தட உருவாக்கக் குழுவின் தலைவர் லோ ஸீ யீ தெரிவித்தார்.
“அனைத்துலக அளவில் மட்டுமின்றி கிழக்கு மலேசியா உட்பட உள்நாட்டிலும் புதிதாக சில இடங்களுக்கு விமானச் சேவை வழங்குவது குறித்தும் ஆராயப்படும்,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈப்போ-சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்யப்போவதாக ஏர்ஏஷியா எடுத்த முடிவை மாநில அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.