வாஷிங்டன்: ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் சில அம்சங்களில் அவை அதிர்ச்சியளிப்பதாகவும் நியாயமற்றதாகவும் உள்ளன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கருத்துடன் திரு ரூபியோவின் அறிக்கை மாறுபட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) சிஎன்என் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியான தகவலில், பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டால் ஈரான்மீது கூடுதல் தாக்குதல்களை நடத்துவதற்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாரிசில் நடைபெறவுள்ள ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஃபுளோரிடாவிலிருந்து புறப்படுவதற்கு முன் திரு ரூபியோ செய்தியாளர்களிடம் பேசினார்.
“பல்வேறு யோசனைகளுடன் பல நாடுகள் தொடர்ந்து ஈரானுடன் தொடர்பில் உள்ளன. ஆனால் உடன்பாட்டை எட்டுவதற்கான முக்கியத் திருப்புமுனையின் விளிம்பில் நாம் இருக்கிறோம் என்று நான் சொல்ல மாட்டேன்,” என்றார்.
இக்கூட்டத்தில் ஈரான் போர் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இடம்பெறவுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பாரசீக வளைகுடாவில் உள்ள தனது துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பொருளியல் தடைகளை நீக்க வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அதே வேளையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் தனது அணுசக்தித் திட்டத்தில் ஈரான் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதிபர் டிரம்ப் எப்போதும் அரசதந்திர ரீதியிலான சுமுகத் தீர்வையே விரும்புவார் என்றபோதிலும் ஈரானின் கோரிக்கைகள் வெறும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக மட்டுமன்றி, நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் விசித்திரமாகவும் உள்ளதால் இந்தப் பேச்சுவார்த்தை அதிகப் பலனைத் தரவில்லை என்று திரு ரூபியோ தெரிவித்தார். எனினும், ஈரானின் எந்தக் குறிப்பிட்ட கோரிக்கையைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் விரிவாக விளக்கவில்லை.
