கத்தாரில் ஈரானிய அதிகாரிகள் சமரசப் பேச்சு

கத்தாரில் ஈரானிய அதிகாரிகள் சமரசப் பேச்சு

படம்: இபிஏ

01 Nov 2026 - 4:24 pm

1 mins read

டோஹா: அமெரிக்காவுடன் மீண்டும் போர் தொடங்காமல் இருப்பது குறித்து விவாதிக்க ஈரானிய அதிகாரிகள் கத்தாரின் டோஹா நகரில் சமரசப் பேச்சுவார்த்தைகளில் சனிக்கிழமை (அக்டோபர் 31) கலந்துகொண்டனர்.

இவ்வாரம் அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. அது முடிந்ததும் அமெரிக்கா மத்திய கிழக்கில் மீண்டும் போரைத் தொடங்குமா என்ற அச்சம் அங்குள்ள பல நாடுகளை பாதித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான்மீது தாக்குதல் நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வூகாண விரும்புகிறார் என்றும் அதே நாளில் கூறினார்.

அண்மைய வாரங்களில் அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துவந்தார். ஏனெனில் இடைத்தவணைத் தேர்தலில் அவரது குடியரசுக் கட்சியினர் அமெரிக்கக் காங்கிரசில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றனர்.

கத்தாரின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 12 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். அதன்பிறகு மறுநாள் ஈரானிய அரசதந்திரிகள் கத்தார் தலைநகர் டோஹா சென்றனர்.

அனைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளிலும் அமெரிக்கா தொடர்பில் இருந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்