குவாலா பிலா: ஜுவாசே தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இஸ்மாயில் லாசிம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய முதல்வராக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக்கொண்டார்.
மலேசியாவின் அம்னோ கட்சியின் குவாலா பிலா வட்டாரத் தலைவரான 67 வயதான அவர் அரச மாளிகையில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்கான பாரம்பரியத் தலைவர் முஹ்ரிஸ் முனாவிர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் அவர்.
மாநிலத்தின் முன்னாள் அரசாங்கத்தில் அவர் கல்வி, மனிதவளம் ஆகிய துறைகளின் அமைச்சர் பதவியை வகித்தார். அம்மாநிலத்தில் அம்னோ கட்சியின் தகவல்துறைத் தலைவராகவும் அவர் இருக்கிறார்.
மலேசியப் பல்கலைக்கழகத்தில் அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.
சனிக்கிழமை நடந்த தேர்தலில் அவர் பக்கத்தான் ஹரப்பான் கட்சியின் முகம்மது அய்டில் அப்துல்லா, பெர்சத்துக் கட்சியின் சுஹைமி முகம்மது யூசோஃப் ஆகிய இருவரையும் ஜுவாசே தொகுதியில் வென்றார்.
மும்முனைப் போட்டி நடந்த அத்தொகுதியில் அவருக்கு 6,907 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்த முகம்மது அய்டிலுக்கு 2,816 வாக்குகளும் முகம்மது சுஹைமிக்கு 506 வாக்குகளும் மக்களால் அளிக்கப்பட்டன.
தேசிய முன்னணிக் கட்சி, பெரிக்கத்தான் நேஷனல் கட்சியுடன் கூட்டணி அமைத்து 18 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையைப் பெற்றது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளின்படி, தேசிய முன்னணிக் கட்சி 16 தொகுதிகளையும் மலேசிய சீனர் சங்கம் இரு தொகுதிகளையும் வென்றன. பெரிக்கத்தான் கட்சி ஏழு தொகுதிகளை வென்றது. அவற்றுள் பாஸ் கட்சி வென்ற நான்கு தொகுதிகளும் வவாசான் கட்சி வென்ற மூன்று தொகுதிகளும் அடங்கும்.
பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 11 தொகுதிகளை வென்றது. அவற்றுள் ஜனநாயகச் செயல் கட்சி வென்ற ஒன்பது தொகுதிகளும் பிகேஆர் கட்சி வென்ற இரண்டு தொகுதிகளும் உள்ளடங்கும்.
திங்கட்கிழமை பொது விடுமுறை
அண்மைய தேர்தலில் கடுமையாக உழைத்தோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதிய முதல்வர் திங்கட்கிழமையை (ஆகஸ்ட் 3) மாநிலத்தில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளார்.
பதவியேற்புக்குப் பிறகு மாநில ஆட்சித் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அவர் விடுமுறையை வழங்கியதாக நெகிரி செம்பிலான் முதல்வர் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

