கெய்ரோ: காஸா முனைக்குக் கடல் வழியாக அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாதபடி இஸ்ரேலியக் கடற்படை முற்றுகையிட்டுள்ளது.
இதை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று காஸாவை நோக்கிச் சென்றது.
அந்தப் பிரிட்டிஷ் படகில் சுவீடனைச் சேர்ந்த ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உட்பட 12 பேர் இருந்தனர். மட்லீன் என்ற பெயர் கொண்ட கப்பல், பாலஸ்தீனர்களை ஆதரிக்கும் ஃபிரீடம் ஃபுலோட்டிலா கூட்டணியால் இயக்கப்பட்டது.
ஜூன் மாதம் 6ஆம் தேதியன்று படகு இத்தாலியின் சிசிலி நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று காஸா மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்து, அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடிநிலை குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்த அமைப்பு இலக்கு கொண்டிருந்தது.
ஆனால், அந்தக் கப்பல் காஸாவை அடைவதற்கு முன்பு இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) இரவு அதைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன.
இதை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது. அப்படகு இஸ்ரேலியத் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
படகின் பயணிகள் அங்கிருந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர் என்று அமைச்சு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது. படகின் சிப்பந்திகள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
படகில் பயணம் செய்தோரில் கிரேட்டா துன்பர்க்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரீமா ஹசானும் அடங்குவர்.
படகில் இருந்த சிறிதளவு அரிசி, குழந்தைகளுக்கான பால் மாவு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் காஸாவுக்குக் கொண்டுசெல்லப்படும் என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு கூறியது.

