ஜெருசலம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்தம் சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) மாலை 5 மணியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
உடன்பாட்டின்படி, போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து 71 மணி நேரத்திற்குள் ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் 48 பேரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மாண்டுபோன பிணைக்கைதிகளும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இஸ்ரேல் சிறைச்சாலைகளில் 250 பாலஸ்தீனக் கைதிகளும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,700 பேரும் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
இந்நடைமுறைகள் எல்லாம் நிறைவடைந்த பின்னர், அமெரிக்க அதிபர் முன்வைத்துள்ள 20 அம்சத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை தொடங்கும்.
இதனிடையே, போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, நுசைரத்தில் ஆயிரக்கணக்கானோர் காஸாவின் வடபகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியதை ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.
போர்நிறுத்தம் தொடங்கிவிட்டதை அடுத்து, காஸாவிற்கு மனிதநேய உதவிகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 600 சரக்கு வாகனங்கள் காஸாவிற்குச் சென்றுவரும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

