இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் நீட்டிப்பு

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்பின் முயற்சி

இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் நீட்டிப்பு

2 mins read
4e4c68ea-d38d-46ef-869f-1f135eb4ccdc
ஈரானியத் தலைமைத்துவத்தில் நிலவும் குழப்பம் காரணமாகவே ஒப்பந்தத்தை எட்டுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது எனத் தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: இஸ்ரேல் - லெபனான் இடையேயான தற்காலிகப் போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்த முக்கிய முடிவு எட்டப்பட்டது.

பேச்சுவார்த்தையின்போது, ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர மிகச் சிறந்த ஒப்பந்தத்திற்காகக் காத்திருக்கத் தயார் என்று டிரம்ப் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் கடந்த எட்டு வாரங்களாக நிலவிவரும் பதற்றமான சூழலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் ஒரு முக்கியத் தடையாக இருந்து வருகிறது.

அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டங்களும் ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடும் தீர்வுகாணப்படவேண்டிய சிக்கல்களாக உள்ளன.

அவசரப்பட்டு ஒரு சமாதான உடன்படிக்கையை எட்ட தான் விரும்பவில்லை என்றும் அது என்றென்றும் நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்.

இதற்கிடையே, ஈரானியத் தலைமைத்துவத்தில் குழப்பம் நிலவுவதாக டிரம்ப் கூறிய கருத்தை ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா காமெனி வியாழக்கிழமை (ஏப்ரல் 23) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஈரானின் ஒற்றுமையைக் குலைக்க எதிரிகள் செய்யும் சதி அது என்று அவர் விமர்சித்தார். ஒற்றுமை இன்னும் பலப்படும், உறுதிப்படும். எதிரிகள் பலவீனமடைந்து, அவமானப்படுவார்கள் என்று தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா பச்சைக்கொடி காட்டினால் ஈரானைத் “கற்காலத்திற்கு” தள்ளும் வகையில் மீண்டும் போரைத் தொடங்கத் தயார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இரு சரக்குக் கப்பல்களை ஈரான் சிறைபிடித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானியப் படகுகளைக் கண்டதும் சுட அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

ஈரானின் அச்சுறுத்தல்களால் உலகப் பொருளியலும் எண்ணெய்ச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காகப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்