கெய்ரோ/ஜெருசலேம்: நிலம், ஆகாயம் எனப் பலவழி தாக்குதல்களால் காஸாவின் புறநகர்ப் பகுதிகளைத் தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.
காஸாவை கைப்பற்றும் திட்டங்களை விவாதிக்க,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டியுள்ளார்.
இஸ்ரேலியப் படைகள் காஸா வட்டாரத்தின் புறநகர்ப் பகுதிகளை வான்வழியாகவும் தரைவழியாகவும் இரவு முழுவதும் தாக்கியதில், அங்கிருந்த பல வீடுகள் முற்றாக இடிந்தது. தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள, அநேக குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியவண்ணம் உள்ளன.
இஸ்ரேல் ராணுவத்தால் காஸா பகுதியில் விடியவிடிய நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர்ச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மத்திய காஸா பகுதியில் அமைந்துள்ள உதவி நிலையத்திலிருந்து உணவு பெற முயன்ற 13 பேரும் அடங்குவர்.
இது தொடர்பிலான அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ள இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் அலுவலகம், கடந்து மூன்று வாரங்களாகக் காஸா வட்டாரத்தில் அதன் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.
மேலும் ஆகஸ்ட் 29 அன்று உதவிப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையங்களின் செயல்பாட்டினை இஸ்ரேல் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்து, அந்த வட்டாரத்தை “ஆபத்தான யுத்த மண்டலம்” என்று அறிவித்ததும் கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே, காஸா நகரின் பெரிய பட்டணங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேய்க் ராட்வான் பகுதியின் குடியிருப்பாளர்கள், இந்தத் தாக்குதல்கள் குறித்து அனைத்துலக ஊடகத்திடம் கருத்துரைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இப்பகுதியில் வசித்து வந்தவர்களில் பலர் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நகரின் மேற்குப் பகுதிக்குத் தஞ்சம் அடைய தவழ்ந்தபடியும் உயிருக்கு அஞ்சித் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறியும் வருகின்றனர்.
‘‘அதே நேரத்தில், மக்களை மேலும் அச்சுறுத்துவதற்காகத் தரைமார்க்கமாகவும் வான்வழியாகவும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன,” என்று அவர்கள் கவலையுடன் கூறினர்.
ஹமாஸின் கடைசி கோட்டையாகக் குறிப்பிடப்படும் காஸா நகரத்தைக் கைப்பற்றும் இலக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவாதித்து, அது சார்ந்த முக்கிய முடிவுகளை நெட்டன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை விரைவில் வகுத்துவிடும் என்று இஸ்ரேலிய தரப்பு தெரிவித்தது.

