ஜெருசலம்: இஸ்ரேலிய விமானங்கள் காஸாவில் தாக்குதல்களைத் தொடர்கின்றன.
பாலஸ்தீன வட்டாரத்தில் ஹமாஸ் குழு, சண்டை நிறுத்த உடன்பாட்டை அத்துமீறியதாகக் கூறிய பிறகு, இஸ்ரேல் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. அண்மைத் தாக்குதல்களில் 26 பேர் மாண்டதாக உள்ளூர்ச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தொடங்கிய தாக்குதல்கள், புதன்கிழமை அதிகாலையிலும் நீடித்தன.
அண்மைத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்து மூன்று வாரமாகிறது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உடனடியாக வலுவான தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டதாக அவரின் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.
தாக்குதல்களுக்கான குறிப்பிட்ட காரணம் எதனையும் அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும் ஹமாஸ் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறிவிட்டதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதியில் அந்நாட்டுப் படைகளுக்கு எதிராக ஹமாஸ் சண்டையிட்டதாக அவர் சொன்னார்.
சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியதாக இரு தரப்பும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறுகின்றன.
காஸாவின் தெற்கே உள்ள ராஃபா நகரில் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படையினரும் ஹமாஸ் குழுவினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.
ஆனால் ராஃபாவில் இஸ்ரேலியப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை என்கிறது ஹமாஸ். சண்டை நிறுத்த உடன்பாட்டில் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அறிக்கையொன்றில் அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஈராண்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 68,000 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் காணாமற்போனதாகவும் காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் தென்பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் மாண்டனர். ஹமாஸ், 251 பேரை காஸாவுக்குப் பிணைபிடித்துச் சென்றது.
பிணைபிடித்தோரில் உயிருடன் இருந்த அனைவரையும் ஹமாஸ் உடன்பாட்டின்படி, இஸ்ரேலிடம் திருப்பி ஒப்படைத்தது. பதிலுக்கு இஸ்ரேல் அதன் சிறைகளில் இருந்த ஈராயிரம் பாலஸ்தீனக் கைதிகளையும் போரின்போது தடுத்துவைக்கப்பட்டோரையும் விடுவித்தது.
இருப்பினும் மாண்ட பிணையாளிகளின் சடலங்களைத் திருப்பிக் கொடுப்பதில் சர்ச்சை நிலவுகிறது. அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ், இடிபாடுகளுக்கு இடையில் அவை இருப்பதால் கண்டுபிடித்து மீட்க அதிக நேரமாகும் என்றது.
ஆனால் மாண்ட பிணையாளிகளில் பெரும்பாலானவர்களின் சடலங்களை ஹமாசால் அணுகமுடியும் என்று இஸ்ரேல் சொல்கிறது.

