ஜகார்த்தாவில் ஏழு மாடிக் கட்டடத்தில் தீ; 22 பேர் மரணம்

1 mins read
2c7ad80a-03e9-47d0-bc08-e378de715c57
மதிய நேரத்தில் முதல் மாடியில் தொடங்கிய தீ, ஏழு மாடிகளுக்கும் பரவியது. - படம்: RANNYPRMITA/FACEBOOK, GATSE8/X

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகரில் உள்ள ஏழு மாடிக் கட்டடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) மதியம் நடந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் மரணமடைந்ததாக அரசாங்க அதிகாரி உறுதிசெய்துள்ளார்.

தீ அணைக்கப்பட்டுவிட்டாலும் கட்டடத்தில் இருந்தோரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன என்று மத்திய ஜகார்த்தா காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் சுசாட்யோ புர்னோமோ கொன்ட்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதிய வேளையில் முதல்மாடியில் தொடங்கிய தீ, மேல்மாடிகளுக்கும் பரவியது. மதிய உணவு நேரம் என்பதால் கட்டடத்தில் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சிலர் வெளியே சென்றுவிட்டனர் என்று திரு சுசாட்யோ குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை வரையில் மரண எண்ணிக்கை இருபதை எட்டியுள்ளது. தீயை முழுதும் அணைப்பதிலும் மக்களை மீட்பதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.

விவசாயத் துறைக்கு ஆளில்லா வானூர்திகளை ஆய்வுப் பணிகளுக்கு அனுப்பும் ‘டெரா ட்ரோன் இந்தோனீசியா’ நிறுவனத்துக்கு அந்தக் கட்டடம் சொந்தமானது. ஜப்பானிய ட்ரோன் குழுமத்தின் நிதியில் இது இயங்குகிறது என்று அறியப்படுகிறது.

‘கொம்பாஸ்’ தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் பல தீயணைப்பு வீரர்கள் கட்டடத்திற்குள் இருந்தோரை வெளியேற்றுவதைக் காட்டியது. சிலர் மேல்மாடிகளில் இருந்த ஏணிப் படிகளில் இறங்கி தப்பிச் செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்