இந்தோனீசியா செல்லும் ஜப்பானியர்களுக்கு ஜப்பானியத் தூதரகம் எச்சரிக்கை

இந்தோனீசியா செல்லும் ஜப்பானியர்களுக்கு ஜப்பானியத் தூதரகம் எச்சரிக்கை

1 mins read
சமூக ஊடகப் பதிவை ஆதாரமாகக் கொண்டு ஜகார்த்தாவின் இணையக் குற்றப்பிரிவு பாலியல் குற்ற விசாரணை
f07056bd-abcc-4d3a-8699-12ad2b6fff8e
இந்தோனீசியாவில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றம் புரிவோருக்கு ஜப்பானிலும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியா செல்லும் ஜப்பானியர்கள், சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபடவேண்டாம் என அங்கு இயங்கும் ஜப்பானியத் தூதரகம் புதன்கிழமை (மே 13) எச்சரிக்கை விடுத்தது.

அவ்வாறு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிவோர்மீது, இந்தோனீசியாவில் மட்டுமின்றி, அவர்கள் தாயகம் திரும்பியதும் ஜப்பானிலும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூதரகம் குறிப்பட்டது.

ஜகார்த்தா உட்பட, தென்கிழக்காசிய நாடுகளில் ஜப்பானியர்கள் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் புரிந்ததாக ஜப்பானில் சமூக ஊடகப்பதிவுகளில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானியத் தூதரக இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்துக்குப் புறம்பாக பாலியல் வன்முறைக் குற்றங்கள் புரிந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்தோனீசியாவில் எவரையும் விசாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, சிறார்களின் சம்மதத்தோடு அச்செயல்கள் புரியப்பட்டாலும் அவை குற்றமாகவே கருதப்படும் எனவும் அறிக்கையில் விளக்கப்பட்டது.

இந்தோனீசியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்ட பிறகு அவ்வகையான ஜப்பானியர்கள் நாடு திரும்பியதும் அவர்கள்மீது ஜப்பானியச் சட்டப்படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜகார்த்தாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் 18 வயதுக்கும் குறைந்த வயதுடைய சிறார்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை சமூக ஊடகங்களில் பெருமையுடன் ஜப்பானியர்கள் பதிவிட்டதாக அறியப்படுகிறது.

காவல்துறை விசாரணை

ஜகார்த்தா காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவு, சமூக ஊடகப் பதிவை ஆதாரமாகக் கொண்டு, நகரின் தென்பகுதியில் பாலியல் குற்ற விசாரணை நடத்தி வருவதாக ஜப்பானின் குயோடொ ஊடகம் செய்தி வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்