நாரா / ஜப்பான்: ஜப்பானின் ஆக வயதான முதியவரான ஷிகெக்கோ ககாவா என்ற பெண்மணி, அவரது 115 வயதில் மறைந்தார்.
மேற்கு ஜப்பானின் நாரா மாநிலத்தில் வசித்துவந்த அந்த மூதாட்டி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) அவரது இறுதி மூச்சை விட்டார்.
அவரது மரணத்தை மனிதவளம், தொழிலாளர், நலத்துறை அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அறிவித்தது.
திருவாட்டி ககாவா 1911ல் பிறந்தவர். அவர் 1934ல் ஒரு மருத்துவப் பள்ளியில் பட்டம்பெற்று ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மகப்பேறு, மகளிர் மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். ஒசாகாவில் உள்ள மருத்துவமனையில் உள்மருத்துவப் பிரிவிலும் அவர் வேலை செய்துள்ளார். இதன் விவரங்களை உள்ளூர் மருத்துவச் சங்கம் வெளியிட்டது.
அவர் நாரா பகுதியில் 1937ல் சொந்த மருந்தகத்தைத் திறந்து மருத்துவம் சார்ந்த பணிசெய்துள்ளார். அவரது 80வது வயதுகளிலும் அவர் மகப்பேறு, மகளிர் மருத்துவத்துடன் சுகாதார உதவியாளராகவும் சேவையாற்றியுள்ளார். சமூக சுகாதாரத்துக்குத் தொண்டாற்றிய திருவாட்டி ககாவா, தோக்கியோவில் 2021ல் நடந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் அங்கமாக சுடர் ஏந்தி வலம்வரும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
அவ்வாறு சுடர் ஏந்தியோரில் ஆக வயதான சுடர் ஏந்துபவராக அவர் அதனை உயர்த்திப் பிடித்தார்.
திருவாட்டி ஷிகெக்கோ ககாவாவின் மரணத்துக்குப் பிறகு தற்போது அந்நாட்டின் ஆக வயதானவராக மற்றொரு பெண்மணி திகழ்கிறார்.
நாரா நகருக்கு அருகில் உள்ள கியோட்டோவில் வசிக்கும் அவரது பெயர் ஃபுயோ கிஷிமொட்டோ. அவருக்கு தற்போது 114 வயது ஆகிறது.


