ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவின் தாமான் புக்கிட் மேவா வட்டாரத்தில் மூண்ட காட்டுத் தீ, அப்பகுதியின் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்குப் பரவியதில் 18 வாகனங்கள் சேதமடைந்தன.
சம்பவத்தின் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) பிற்பகல் 1.32 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்தது.
அதையடுத்து லார்க்கின் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து உதவிக் குழு அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஏறத்தாழ 0.37 ஹெக்டர் பரப்பளவில் தீ மூண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 9 தீயணைப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, தீ ஏற்கெனவே சில வாகனங்களுக்குப் பரவியிருந்தது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.37 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மாலை 5.20 மணிக்கு தீயணைப்பு நடவடிக்கை நிறைவுபெற்று, அந்த இடம் பாதுகாப்பானது என்பது உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
தீச்சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

