ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவுக்கு வரும் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக இருந்துவரும் கடைத்தொகுதியான சிட்டி ஸ்குவேர் பெரிய அளவில் புதுப்பிக்கப்படவுள்ளது.
ஹோட்டல் அறைகள், சுகாதார மற்றும் நலன் வளாகம் (health and wellness hub) போன்ற வசதிகள் இந்தக் கடைத்தொகுதியில் சேர்க்கப்படவுள்ளன.
சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதிக்கான புதுப்பிப்புப் பணிகள் இம்மாதம் தொடங்கிவிட்டன. 2027ஆம் ஆண்டு நான்காம் காலாண்டுக்குள் புதுப்பிப்புப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிட்டி ஸ்குவேரை நிர்வகிக்கும் ஜோடாயா கார்யா நிறுவனம் திங்கட்கிழமை (நவம்பர் 3) அறிக்கையில் தெரிவித்தது.
புதுப்பிப்புப் பணிகளின்போது சிட்டி ஸ்குவேர் முழுமையாக செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
புதுப்பிப்புப் பணிகளுக்கு வழிவிட ‘போப்புலர்’, ‘மிஸ்டர் டிஐஒய்’ (Popular, Mr DIY) போன்ற சில சில்லறை வர்த்தகக் கடைகள் முன்னதாக இவ்வாண்டு சிட்டி ஸ்குவேரிலிருந்து வெளியேறின.
சிட்டி ஸ்குவேர் 1990களின் நடுப்பகுதியில் ஜோகூர் பாரு நகரின் மையப் பகுதியில் கட்டப்பட்டது. அது, சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு, சுங்கச் சாவடி, தனிமைப்படுத்துதல் நிலையத்துடன் மேம்பாலம் வாயிலாக இணைக்கப்பட்டிருந்தது.
பொதுவாக சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே பயணம் மேற்கொள்வோர் முதலில் அல்லது கடைசியாக சிட்டி ஸ்குவேருக்குப் போவது வழக்கமாக இருந்து வருகிறது.

