ஜோகூர் பாரு: சிறிய, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் ஜோகூர் மாநில அரசாங்கம், பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை உருவாக்கும் என அம்மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
சமூக வருகை அனுமதிச்சீட்டில் வரும் சுற்றுப்பயணிகள், ஜோகூரில் சட்டவிரோதமாக வேலை செய்வதுடன் வர்த்தகங்களையும் நடத்திவருவது குறித்த கவலைகளே இந்தப் பணிக்குழுவை அமைக்கும் முடிவுக்கு வித்திட்டதாகத் திரு ஒன் கூறினார்.
புதிய பணிக்குழுவில் மலேசிய நிதியமைச்சு, குடிநுழைவுத் துறை உள்ளிட்ட அமைப்புகள் அங்கம் வகிக்கும்.
2025ஆம் ஆண்டுக்கும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கும் இடையில், விசா குற்றங்கள் தொடர்பாக 54,791 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நேரடி முதலீட்டை ஜோகூர் தொடர்ந்து வலுவாக ஈர்த்து வருவதால் இது தேவைப்படுகிறது. “முதலீட்டாளர்கள் வரும்போது வேலைவாய்ப்புகள் பெருகும். ஆனால், அதிலும் சவால்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
சந்தையில் தங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா எனக் கவலைப்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்களால் உள்ளூர்வாசிகளுக்குப் பயனில்லை என்றால், அந்த முதலீடுகள் தேவையற்றவை என்றும் திரு ஒன் சொன்னார்.

