தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வரும் ஜோகூர் அறிவியல் பாட ஆசிரியர்கள்

2 mins read
3fa5f1ee-43bc-4f9e-aa3f-f6059fedb3e4
பள்ளி சோதனைக்கூடங்களில் பாடங்கள் நடத்துவது குறித்த பயிற்சி வகுப்பில் ஜோகூரைச் சேர்ந்த அறிவியல் பாட ஆசிரியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலம் தனது கல்வியை அதிக போட்டித்தன்மை மிக்கதாக, முற்போக்கு சிந்தனை உடையதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதில் ஒரு பகுதியாக அறிவியல், ‘ஸ்டெம்’ (stem) எனப்படும் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தனது ஆசிரியர்கள் தகுந்த பயிற்சியும் தேர்ச்சியும் பெறும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதற்காக, அம்மாநிலம் முதல் முறையாக தனது ஆசிரியர்களில் 30 பேரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை ஸ்டெம் கல்விப் பயிற்சியில் ஈடுபட்டு ஜோகூர் மாநிலப் பள்ளிகளின் கல்விப் பயிற்றுவிப்பை மேம்படுத்தும் பணியில் இறங்குவர்.

‘பங்சா ஜோகூர் ஸ்கூல்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜோகூர் மாநில பட்டத்து இளவரசரான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், மாநில கல்வித் தரத்தை உயர்த்தி ஜோகூரின் நீண்டகால பொருளியல் இலக்குகளை அடைய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

முதல் குழுவாக வந்திருக்கும் இந்த 30 பேரும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோருடன் மாநிலக் கல்வி அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் யாவரும் தினமும் ஜோகூரின் இஸ்கந்தர் புத்ரி நகரிலிருந்து சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்துக்கு வருகின்றனர்.

இதன்மூலம் மலேசிய கல்வியாளர்களுக்கு தேசிய கல்விக் கழகம் பூன் லேயில் உள்ள தனது வளாகத்தில் முதல் முறையாக பயிற்சி அளிக்கிறது.

இந்தத் திட்டத்தின்படி, ஜோகூர் மாநிலத்தில் உள்ள நான்கு பள்ளிகளைச் சேர்ந்த 212 ஆசியர்கள் பயிற்சி பெறுவர் என்றும் 4,300 மாணவர்கள் பயன் பெறுவர் என்றும் ஜோகூர் கல்வி அதிகாரி அஸ்னான் தமின் தெரிவித்தார். இந்தத் திட்டம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுதோறும் குறைந்தது 112 மணிநேரம் ஸ்டெம் பாடத் திட்டங்களில் பயில்வர். இது தற்போது இந்த பாடத் திட்டத்துக்கு இருக்கும் 64 மணிநேரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரு மடங்கு,” என்று திரு அஸ்னான் விளக்கினார். 

குறிப்புச் சொற்கள்