காஸா போரை நிறுத்துமாறும் அடக்குமுறை அரசாங்கங்களை எதிர்க்குமாறும் கேட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

2 mins read
f097ffd6-01ce-44af-981f-1ffd70a9c367
ஜனநாயகக் கட்சி மாநாட்டின் கடைசி நாளில் உரையாற்றிய திருவாட்டி ஹாரிஸ். - படம்: ஏஎஃப்பி

சிகாகோ: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தம்மை ஜனநாயகக் கட்சி முன்மொழிந்திருப்பதை வியாழக்கிழமையன்று அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி மாநாட்டின் கடைசி நாளான வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) திருவாட்டி ஹாரிஸ் தாம் முன்மொழியப்பட்டதை ஏற்றுக்கொண்டார்.

மேலும், காஸா போரை நிறுத்துமாறும் உலகில் அடக்குமுறை அரசாங்கங்களை எதிர்க்குமாறும் அவர் தமது உரையில் குரல் கொடுத்தார். திருவாட்டி ஹாரிசின் இந்தப் போக்கு, அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் போக்குக்கு முற்றிலும் மாறுபட்டது எனக் கூறப்படுகிறது.

“ஜனநாயக முறைக்கும் அடக்குமுறைக்கு இடையே தொடரும் போராட்டத்தில் எனது நிலைப்பாட்டை நான் அறிவேன். அமெரிக்கா எங்குள்ளது என்பதும் எனக்குத் தெரியும்,” என்றார் திருவாட்டி ஹாரிஸ். திரு டிரம்ப், சர்வாதிகாரிகளுக்கு அடிபணிவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பலர் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டின் கடைசி நாளில் “வருங்காலத்துக்கான புதிய பாதை”யை வரையப்போவதாக 59 வயது திருவாட்டி ஹாரிஸ் உறுதியளித்தார். அவரும் 78 வயதாகும் திரு டிரம்ப்பும் போட்டியிடவிருக்கும் அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் 11 வாரங்களே உள்ளன.

தற்போது அதிபர் பதவியை வகிக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு தேர்தலிலிருந்து விலகிக்கொண்டார். ஜனநாயகக் கட்சியினர் பலர் 81 வயதாகும் திரு பைடன் பதவி விலகவேண்டும் என்று குரல் கொடுத்தது அதற்குக் காரணம்.

அதனைத் தொடர்ந்து தமக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிட திருவாட்டி ஹாரிசை அங்கீகரிப்பதாக திரு பைடன் அறிவித்திருந்தார்.

குறுகிய காலத்தில் அமெரிக்காவுக்கான தமது திட்டம் குறித்து அதிகம் பேசாதிருந்த திருவாட்டி ஹாரிஸ், திரு டிரம்ப்பின் அவதூறுப் பேச்சுக்கு ஆளானர். கறுப்பின, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த திருவாட்டி ஹாரிசின் இனம் சார்ந்த பின்னணியை திரு டிரம்ப் கிண்டலாகப் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி மாநாட்டில் திருவாட்டி ஹாரிஸ் அழுத்தந்திருத்தமாக உரையாற்றினார்.

காஸா போரில் திரு பைடன் இஸ்ரேலுக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டித்து பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநாடு நடக்கும் சிகாகோ நகரில் பேரணி நடத்தினர். அதற்கு மறுநாளான வியாழக்கிழமை திருவாட்டி ஹாரிஸ் உரையாற்றினார்.

“பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் செய்துகொள்ள இதுதான் நேரம்,” என்றார் திருவாட்டி ஹாரிஸ். தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாகவும் அதைத் தாம் ஆதரிப்பதாகவும் கூறிய அவர், அதேவேளை கடந்த 10 மாதங்களாக காஸாவில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டதைக் கண்டு மனமுடைந்து போய்விட்டதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்