அயலகத் தமிழர்களுக்கான இவ்வாண்டின் கணியன் பூங்குன்றனார் விருதைச் சிங்கப்பூரைச் சேர்ந்த திரு சரவணன் பத்மநாதன், 56, பெற்றுள்ளார்.
சென்னையில் நடக்கும் அயலகத் தமிழர் தின மாநாட்டின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை (ஜனவரி 12) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அவ்விருதை வழங்கினார்.
கணியன் பூங்குன்றனார் விருதைப் பெற்ற சரவணனுக்குக் கேடயமும் 18 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டன.
சமூக மேம்பாட்டில் தமிழர்களுக்கு உள்ள அக்கறையை உலகிற்கு உணர்த்தும் வகையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
25 ஆண்டுகளாக வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழுவிலும் ஐந்து ஆண்டுகளாக நொவீனா ரோட்டரி கிளப்பிலும் தொண்டாற்றிவந்துள்ளார் சரவணன்.
ரோட்டரி கிளப் மூலம் அவர் தமிழ்நாட்டில் கண் தெரியாத குழந்தைகளுக்கு மடிக்கணினிகள் விநியோகித்தல், ஒற்றைப் பெற்றோருக்குத் தையல் இயந்திரங்களும் மடிக்கணினிகளும் விநியோகித்து, சுயதொழில் தொடங்க ஊக்குவித்தல் முதலான முயற்சிகளுக்குத் தலைமைதாங்கியுள்ளார்.
இவரது ஒருங்கிணைப்பில் ரோட்டரி கிளப் நொவீனா, தமிழ்நாட்டிலுள்ள ரோட்டரி கிளப்புடன் கைகோத்து தமிழ்நாட்டு மருத்துவமனைக்கான மருத்துவக் கருவிகளை வழங்கியது.
இந்தோனீசியா, மலேசியா போன்ற நாடுகளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடை, உணவு, பள்ளிக்கூடப் பொருள்கள் போன்றவற்றை விநியோகிக்கும் ரோட்டரி கிளப்பின் முயற்சிகளுக்கும் அவர் தலைமைதாங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தான் பின்பற்றும் சமயம் அல்லாது மற்ற சமய வழிபாட்டுத் தலத்துக்கும் தொண்டூழியக் கணக்காளராக அவர் உதவியுள்ளார்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டியில் பிறந்த சரவணன், 1996ல் சிங்கப்பூருக்கு வந்தார். கணக்காளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்த அவர், 2008ல் தன் சொந்த நிறுவனமான ‘செயோன் புரோ பிரைவேட் லிமிடட்’டைத் (Seyon Pro) தொடங்கினார். சிங்கப்பூரிலுள்ள அந்நிறுவனம் கணக்கியல், நிதி ஆலோசனைகள் வழங்குகிறது.
64 நாடுகளிலிருந்து மொத்தம் எட்டுப் பேருக்கு இவ்வாண்டின் கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியப் பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நனுக்குத் தமிழ் மாமணி விருதைத் திரு ஸ்டாலின் வழங்கினார்.
வெளிநாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலருக்கும் விருதுகளையும் தமிழ்ப் பாடநூல்களையும் அவர் வழங்கினார்.

