தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கெடா வெள்ளம்: 1,500 ஹெக்டர் நெல் வயல்கள் மூழ்கிச் சேதம்

2 mins read
972 விவசாயிகளுக்கு 13.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு
bc5ebfe1-1489-4628-aa94-cf7abf08a115
ஜித்ராவில் செப்டம்பர் 26ஆம் தேதி, வெள்ளத்தில் மூழ்கிய நெல் வயல்களைப் பார்வையிட்ட விவசாயிகள் அமைப்பு ஆணையத்தின் தலைவர் மஹ்ஃபுஸ் ஒமார் (இடம்). - படம்: பெர்னாமா

ஜித்ரா: மலேசியாவின் கெடா மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால், நெல் விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட 13.5 மில்லியன் ரிங்கிட் (4.2 மில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 1,500 ஹெக்டருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் மூழ்கியதாகவும் இதனால் மொத்தம் 972 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் விவசாயிகள் அமைப்பு ஆணையம் கூறியது.

நெற்பயிர்கள் 85 முதல் 100 நாள்களுக்கு உட்பட்டவை என்றும் அறுவடைக்குத் தயாரான நிலையில் அவை பாதிக்கப்பட்டது மனமுடையச் செய்வதாகவும் ஆணையத்தின் தலைவர் மஹ்ஃபுஸ் ஒமார் கூறினார்.

விளைச்சல் குறைவு என்றபோதும் வயல்களை அடுத்த பயிரிடலுக்குத் தயார்ப்படுத்துவதற்காக விவசாயிகள் வேறு வழியின்றி அறுவடை செய்ய நேரிட்டதாகவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்னதாக, கம்போங் பாயா டொக் டேயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சின் உணவுக் கூடைகளை அவர் விநியோகித்தார்.

விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை நிர்ணயிக்குமுன் வேளாண் துறை ஆய்வு செய்து இழப்பை மதிப்பிடவிருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு அனைத்துத் தரப்பினரின், குறிப்பாக விவசாயிகளின் ஒத்துழைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

இழப்பீட்டுத் தொகை ஒதுக்கப்படுவதற்கு ஏதுவாக வேளாண் துறை விரைவாக ஆய்வு செய்து வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றிடம் மதிப்பீட்டை ஒப்படைக்கும் என்று தாம் நம்புவதாகத் திரு மஹ்ஃபுஸ் ஒமார் கூறினார்.

விவசாயிகள் படிவங்களை நிரப்புவதற்கும் வேளாண் துறை அவற்றிலுள்ள விவரங்களைச் சரிபார்ப்பதற்கும் சிறிது காலம் பிடிக்கும் என்பதை அவர் சுட்டினார்.

இதற்கிடையே, 58 வயது விவசாயி அர்மான் மஜித், கிட்டத்தட்ட 11 ஹெக்டர் பரப்பளவிலான தனது நெல் வயல்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

இழப்பீடு கிடைத்தால்தான் டிராக்டர், அறுவடை இயந்திரங்களுக்கான வாடகைச் செலவையாவது ஈடுகட்ட இயலும் என்றார் அவர். இத்தகைய இயந்திரங்களுக்கான வாடகையும் விதை நெல்லுக்கான விலையும் அதிகரிக்கும் நிலையில், இத்தகைய சூழல்களையும் எதிர்கொள்வது விவசாயத் தொழிலைக் கேள்விக்குறியாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்