சிலாங்கூரில் கொட்டிய மழையால் இடிந்துவிழுந்த முக்கியப் பாலம்

சிலாங்கூரில் கொட்டிய மழையால் இடிந்துவிழுந்த முக்கியப் பாலம்

படம்: பெர்னாமா

04 Nov 2026 - 8:47 pm

1 mins read

சுங்கை புலோ: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் புதன்கிழமை (நவம்பர் 4) பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து அங்குள்ள முக்கியச் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பெட்டாலிங் வட்டாரத்தில் ஜாலான் குபு காஜாவிற்கு அருகில் உள்ள பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது.

பாயா ஜராஸ் ஹிலிர் நிலையத்தில் 48 மில்லிலிட்டர் அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்ததால் சுங்கை சுபாங்கில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டு ஆற்றங்கரைகளை அரித்துசென்றது.

அதன் விளைவாகப் பின்னிரவு 2 மணியளவில் பாலம் சரிந்ததாகப் பெட்டாலிங் வட்டாரப் பொதுப் பணித்துறை தெரிவித்தது.

கம்போங் குபு காஜாவையும் பாயா ஜராஸ் ஹிலிரையும் இணைக்கும் முக்கியப் பாதை, பாலம் இடிந்துவிழந்ததால் துண்டிக்கப்பட்டது.

அதையடுத்து, பாதுகாப்பு கருதி அதிகாரிகள் அந்தப் பாதையைப் போக்குவரத்துக்கு மூடினர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான போக்குவரத்தைச் சீர்படுத்த தற்காலிகமாகச் செயற்கை பாலம் ஒன்றை அதிகாரிகள் அமைத்தனர்.

இதற்கிடையே, சுங்கை புலோ, பாயா ஜராஸ், கம்போங் மலாயு சுபாங், ராவாங், ‌‌‌ஷா அலாமின் பல பகுதிகள் ஆகியவை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகச் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவு குறிப்பிட்டது.

இதற்கிடையே, மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்குவரத்து மேலாண்மை நிலையம் கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் ஷா ஆலம் சந்திப்பு உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளதாகச் சொன்னது.

குறிப்புச் சொற்கள்