பெய்ஜிங்: சீனாவில் 20 வயதுப் பெண் ஒருவருக்கு அண்மையில் சிறுநீரகப் பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஹுவா எனும் அப்பெண் ஹெனான் பகுதியில் வசிப்பவர்.
அவர் தனக்குப் பிடித்த ‘பாப்’ இசைக் கலைஞரைப் பின்பற்றி ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு வண்ணத் தலைமுடிச் சாயத்தைப் பயன்படுத்தினார்.
ஆனால், கால்களில் சிவப்புப் புள்ளிகள், மூட்டு வலி, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ உதவி நாடினார். மருத்துவப் பரிசோதனையில் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளேடு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
‘கே-பாப்’ பிரபலங்கள் தொடர்ந்து தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றிவருவதைப் பார்த்து அவர்களின் ரசிகர்களும் அவ்வாறே செய்ய முயல்கின்றனர். எடுத்துக்காட்டாக வானவில் நிறங்களில் சிலர் தங்கள் தலைமுடிக்குச் சாயம் பூசுகின்றனர்.
இத்தகைய சாயங்களில் இருக்கும் ரசாயனங்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சில தலைமுடிச் சாயங்களில் கலக்கப்படும் ரசாயனங்கள் விலங்குகளிடையே புற்றுநோய் ஏற்படுத்த வல்லவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களிடையே இத்தகைய பாதிப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
எவ்வளவு தலைமுடிச் சாயத்தைப் பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகக்கூடும் என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், புற்றுநோய்க்கு அப்பால் சிறுநீரகப் பாதிப்பு, சுவாசப் பிரச்சினை, ஒவ்வாமை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் தலைமுடிச் சாயங்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பாகக் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.