கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை ‘ஸ்கேன்’ செய்யும் கருவிகள் போதைப்பொருள் போன்ற சட்டவிரோதக் கடத்தல் பொருள்களைக் கண்டறியும் ஆற்றல் கொண்டவை அல்ல என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
“விமான நிலைய ‘ஸ்கேன்’ கருவிகள் முக்கியமாக வெடிபொருள்கள், ஆயுதங்கள், ஆபத்தான உலோகப் பொருள்கள் ஆகியவற்றைக் கண்டறியக்கூடியவை. பாதுகாப்பான விமானப் போக்குவரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அவை அந்தச் செயல்களுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
“போதைப்பொருளைக் கண்டறிவது என்பது ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தும் அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பொறுத்தது. அத்துடன், ஸ்கேன் செய்யப்படும் பொருள் தோன்றும் விதத்தை மதிப்பிடும் திறனையும் அந்தப் பொருள் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை முடிவு செய்யும் ஆற்றலையும் அடிப்படையாக் கொண்டது அந்தக் கண்டுபிடிப்பு.
“எனவே, தற்போது உள்ள பயணப்பெட்டி பரிசோதனைக் கருவிகளில் போதைப்பொருள் போன்ற சட்டவிரோதக் கடத்தல் பொருள்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் பொருத்தப்படவில்லை,” என்று மலேசிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் திரு சைஃபுதீன் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாகச் சென்றதாக நம்பப்படும் மலேசிய இணை விமானி ஒருவர் ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
நாட்டின் நுழைவு முகப்புகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து அளித்த புரிந்துணர்வுக் குறிப்பின் அடிப்படையில் மலேசிய அரசாங்கம் ஆகஸ்ட் 19ஆம் தேதி 17 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு கடத்தலில் நல்வாழ்வுக்கு முன்னுரிமை
நாடுகடத்தப்படும் மியன்மார் நாட்டவர் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த திரு சைஃபுதீன், மியன்மாரில் உயிருக்கு ஆபத்தையோ கொடுமையையோ எதிர்நோக்குவோர் அல்லது வழக்குகளை எதிர்நோக்குபவர் எனத் தெளிவான ஆதாரங்களுடன் தெரியவரும் எந்த ஒரு தனிநபரும் மியன்மாருக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்றார்.
நாடுகடத்தல் நடைமுறையில் பாதுகாப்பு, மனித உரிமை, நல்வாழ்வு போன்றவற்றுக்கு மலேசிய அரசாங்கம் முக்கியவத்துவம் கொடுப்பதாக அவர் தமது விளக்கத்தில் குறிப்பிட்டார்.
